பெண்ணை கொன்று யமுனை ஆற்றில் வீசிய ரியல் எஸ்டேட் அதிபர் கூட்டாளியுடன் கைது
பெண்ணை கொன்று யமுனை ஆற்றில் வீசிய ரியல் எஸ்டேட் அதிபர் கூட்டாளியுடன் கைது
ADDED : ஏப் 14, 2025 03:55 AM

லக்னோ : உத்தர பிரதேசத்தில், 6 லட்சம் ரூபாய் கொடுத்தும், நிலத்தை பதிவு செய்யாததால், பணத்தை திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு மது கொடுத்து கொன்றதோடு, உடலை எரித்து, யமுனை ஆற்றில் வீசிய ரியல் எஸ்டேட் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யின் எடவா பகுதியை சேர்ந்தவர், அஞ்சலி, 28. இளம் விதவையான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், சிவேந்திர யாதவ் என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம், நிலம் வாங்குவதற்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
ஆனால், பத்திரப்பதிவு செய்யாமல் இரண்டு மாதங்களுக்கு மேல் தாமதம் செய்ததால், ஏமாற்றப்பட்டதை அறிந்த அஞ்சலி, பணத்தை திருப்பிக் கேட்டார்.
இதையடுத்து, வீட்டுக்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி சிவேந்திர யாதவ் கடந்த 7ம் தேதி கூறினார்.
அங்கு சென்ற அஞ்சலிக்கு, சிவேந்திர யாதவ் வலுக்கட்டாயமாக மது கொடுத்தார்.
பின், அவரது நண்பர் கவுரவ், 19, உடன் சேர்ந்து, அஞ்சலியின் கழுத்தை நெரித்துக் கொன்றார். அஞ்சலி உயிரிழந்ததும், அவரது உடலை, தன் தந்தை மற்றும் மனைவிக்கு வீடியோ கால் மூலமாக சிவேந்திர யாதவ் காண்பித்திருக்கிறார்.
அதன்பின், அஞ்சலியின் உடலை யமுனை ஆற்றங்கரைக்கு இருவரும் எடுத்துச்சென்று எரித்தனர். அரைகுறையாக எரிந்த நிலையில இருந்த உடலை, ஆற்றுக்குள் வீசிவிட்டு, எதுவும் நடக்காதது போல் திரும்பினர்.
இதற்கிடையே, அஞ்சலியை காணாமல், அவரது சகோதரி கிரண் மற்றும் உறவினர்கள் தேடினர்; ஐந்து நாட்களாகியும் கிடைக்கவில்லை. அஞ்சலியின் ஸ்கூட்டர், கழிவுநீர் கால்வாய் அருகே எரிந்த நிலையில் கிடந்ததை நேற்று முன்தினம் பார்த்தனர்.
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளித்த கிரண், ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கும், அஞ்சலிக்கும் பிரச்னை இருந்ததையும் தெரிவித்தார்.
உடனே, சிவேந்திர யாதவை பிடித்துச் சென்று விசாரித்தபோது, அஞ்சலியை தன் நண்பர் கவுரவுடன் சேர்ந்து கொலை செய்து யமுனை ஆற்றில் வீசியதை ஒப்புக் கொண்டார்.
யமுனை ஆற்றில் அவர் குறிப்பிட்ட இடத்தில், மாநில பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் போலீசார் தேடினர்.
சில கி.மீ., தொலைவில் அஞ்சலியின் உடல் நேற்று கிடைத்தது. அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டியதை தொடர்ந்து, சிவேந்திரா, கவுரவ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அஞ்சலியின் கழுத்தை நெரிக்க பயன்படுத்திய டவல், உடலை யமுனை ஆற்றுக்கு எடுத்துச் சென்ற கார், அஞ்சலியின் எரிந்து போன ஸ்கூட்டர் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவேந்திராவின் தந்தை மற்றும் மனைவிக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெறுகிறது.