ADDED : பிப் 16, 2025 11:33 PM
இம்பால்: மணிப்பூரில் கூகி கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட 11 பேரை, அம்மாநில போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டி மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையே 2023 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறி ஒன்றரை ஆண்டுகளாக நீடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய, மாநில அரசின் அதிரடி நடவடிக்கைகளால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிலைமை கட்டுக்குள் வந்தது.
இதற்கிடையே, வன்முறையை துாண்டும் வகையில் செயல்படும் கிளர்ச்சியாளர்களை கைது செய்வது, அவர்கள் தங்குமிடங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை போலீசார் தீவிரப்படுத்திஉள்ளனர்.
இந்நிலையில், கூகி - மெய்டி இன மக்கள் இடையே அடிக்கடி மோதல் நிகழும் சுராசந்த்பூர் மாவட்டத்தின் பழைய காக்கோல் பகுதியில் கூகி கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் ஹுய்கப் கிராமத்தில் மெய்டி கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்கள் பயன்படுத்திய ஏராளமான ஆயுதங்கள், வெடி பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

