திருமண பலாத்கார வழக்கு விசாரணை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை
திருமண பலாத்கார வழக்கு விசாரணை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை
ADDED : அக் 25, 2024 02:21 AM
புதுடில்லி, வரும், நவ., 10ம் தேதியுடன் ஓய்வு பெறுவதால், குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணையை முடிக்க முடியாது என்பதால், திருமண பலாத்தாரம் தொடர்பான வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார்.
மனைவியின் அனுமதியில்லாமல் கணவன் உடலுறவு கொள்ளும், திருமண பலாத்காரத்தை குற்றமாக்கக் கோரி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளன.
ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம் மற்றும் சமீபத்தில் அறிமுகமான பி.என்.எஸ்., எனப்படும் பாரதிய நியாய சன்ஹிதாவின் சில பிரிவுகள், இந்த விவகாரத்தில் கணவர்களுக்கு விலக்கு அளிக்கின்றன.
இது தொடர்பாக டில்லி மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றங்களில் மாறுபட்ட தீர்ப்புகள் பிறப்பிக்கப்பட்டன. இது தொடர்பான மேல் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.
எவ்வளவு காலம்
இந்த வழக்குகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு விசாரித்து வருகிறது.
முந்தைய விசாரணையின் போது, 'மனைவியின் அனுமதியின்றி கணவன் உடலுறவு கொள்வதை குற்றமாக அறிவித்தால், குடும்ப நடைமுறை சீர்குலைந்து விடும்' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களுடைய தரப்பு வாதங்களை முன்வைக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என, வழக்கறிஞர்களிடம் அமர்வு கேட்டது.
அப்போது, மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன், தன் வாதத்தை முடிக்க ஒரு நாள் அவகாசம் கோரினார்.
அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், தன் வாதத்தை முடிக்க ஒரு நாள் தேவைப்படும் என்றார்.
இந்த வழக்கில் ஆஜரான மற்ற மூத்த வழக்கறிஞர்களான ராகேஷ் திவேதி, இந்திரா ஜெய்சிங் போன்றோரும், தங்கள் வாதத்துக்கு தலா ஒரு நாள் அவகாசம் தேவைப்படுவதாக கூறினர்.
அவகாசம்
இந்த வழக்கை ஒத்தி வைத்து விட்டு, அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கலாம் என அமர்வு திட்டமிட்டிருந்த நிலையில், மூத்த வழக்கறிஞர்கள் அனைவரும் அவகாசம் கேட்டது, திருப்பத்தை ஏற்படுத்தியது.
வரும் நவ., 10ம் தேதியுடன் தலைமை நீதிபதி ஓய்வு பெறுகிறார்.
அதற்கு முன்னதாக தீபாவளி விடுமுறை வருகிறது.
இதனால், இந்த குறுகிய காலத்துக்குள் வாதங்கள் முன்வைக்கப்பட்டு, விசாரித்து, உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பதால், இந்த வழக்கின் விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்த தலைமை நீதிபதி, வேறு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றுவதற்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து, புதிய தலைமை நீதிபதி பதவியேற்றபின், வேறு அமர்வுக்கு இந்த வழக்கின் விசாரணையை மாற்றுவது குறித்து முடிவெடுப்பார். இதற்கேற்ப, வழக்கின் விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.