ADDED : ஜன 22, 2024 06:04 AM
பெங்களூரு: ஆவணங்களை தொலைத்ததால் தலைமை ஏட்டிற்கு அளிக்கப்பட்ட, கட்டாய ஓய்வை மறுபரீசிலனை செய்யும்படி, சி.ஐ.எஸ்.எப்.,க்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்து உள்ளது.
சிக்கமகளூரு கடூரை சேர்ந்தவர் புட்டப்பா. சி.ஐ.எஸ்.எப். எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில், தலைமை ஏட்டாக பணியாற்றினார்.
கடந்த 2010ல் மும்பையில் பணியில் இருந்தார். அப்போது சில முக்கிய ஆவணங்களை தொலைத்ததாக, புட்டப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முழு ஓய்வூதிய பலன்களுடன், புட்டப்பாவுக்கு 2011ல் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 2013ல், மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி சச்சின் சங்கர் மகதும் விசாரித்து வந்தார். மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.
நீதிபதி கூறுகையில், ''தனது அலட்சியத்தால், ஆவணங்கள் தொலைந்ததை மனுதாரர் ஒப்புக்கொண்டு உள்ளார். தன் மீது எந்த தவறும் இல்லை என்று அவர் மறுக்கவில்லை. பணிநீக்கம் செய்வது அரசியலமைப்பு ஆய்வுக்கு உட்பட்டது.
''சிறிய தவறுக்காக பணிநீக்கம், கட்டாய ஓய்வு வழங்குவது சமூக எதிர்பார்ப்புகளுக்கு முரணானது. மனுதாரர் செய்த தவறுக்காக, கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டதை ஏற்கவில்லை.
''மனுதாரருக்கு அளிக்கப்பட்ட கட்டாய ஓய்வை, மூன்று மாதங்களுக்குள் மத்திய தொழில் பாதுகாப்பு படை, மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார்.