இன்று தாயகம் திரும்புகிறார் சாதனை வீரர் சுபான்ஷு சுக்லா
இன்று தாயகம் திரும்புகிறார் சாதனை வீரர் சுபான்ஷு சுக்லா
ADDED : ஆக 17, 2025 12:51 AM

புதுடில்லி: சர்வதேச விண்வெளி மையத்தில் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, வெற்றியுடன் திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்புகிறார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் சுபான்ஷு சுக்லா. இவர், நாசா மற்றும் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனம் சார்பில் 'ஆக்சியம்- - 4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, மேலும் மூன்று பேருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த, ஜூன் 25ல் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட இவர்கள், சர்வதேச விண்வெளி மையத்தை மறுநாள் அடைந்தனர். கடந்த, ஜூலை 15ல் பூமிக்கு திரும்பினர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாயம் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது.
இந்நிலையில், அவர் இன்று நாடு திரும்புகிறார். டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். பின் சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னோவிற்கு சென்று குடும்பத்தினரோடு சில நாட்கள் தங்கியிருப்பார்.
அதன் பின், வரும் 23ம் தேதி டில்லியில் நடைபெறும் தேசிய விண்வெளி நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ளார். வரும், 2027ம் ஆண்டில் இஸ்ரோ தன் முதல் மனித விண்வெளிப் பயணத்தை எதிர்நோக்கியுள்ளதால், சுக்லா தன் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது 'ககன்யான்' திட்டத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அமெரிக்காவில் இருந்து இந்தியா வருவதற்கு விமானத்தில் ஏறி அமர்ந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவர் பதிவிட்டிருப்பதாவது:
விண்வெளி பயணத் திற்குப் பின் முதல் முறையாக என் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நாட்டு மக்களை சந்திக்க இருப்பதால் நான் மகிழ்ச்சிய டைகிறேன். என் இதயத்தில் கிளர்ச்சி உண்டானது.
பயணத்தின் போதும் அதற்குப் பின்னும் அனைவரிடமிருந்தும் நம்பமுடியாத அன்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறேன். உங்கள் அனைவருடனும் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியாவுக்குத் திரும்பி வர ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நாம் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும். விண்வெளிப் பயணத்தில் ஒரே நிலையானது மாற்றம். அது வாழ்க்கைக்கும் பொருந்தும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.