காஷ்மீரில் 35 ஆண்டுகளில் இல்லாத ஓட்டுப்பதிவு சாதனை!
காஷ்மீரில் 35 ஆண்டுகளில் இல்லாத ஓட்டுப்பதிவு சாதனை!
ADDED : மே 28, 2024 01:38 AM
புதுடில்லி :ஜம்மு - காஷ்மீரில், லோக்சபா தேர்தல் வரலாற்றிலேயே, கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த முறை தான் அதிகபட்ச ஓட்டுபதிவாகி உள்ளது. இதைஅ டுத்து, அங்கு சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட் டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, 2019 ஆகஸ்டில் ரத்து செய்தது.
தொடர்ந்து, அந்த மாநிலத்தை, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதில், சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக, ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்டது.
ஐந்து கட்ட தேர்தல்
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல், அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கிடையே, செப்., 30க்குள் ஜம்மு - காஷ்மீரில் சட்ட சபை தேர்தலை நடத்த வேண்டும் என, தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.
லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என, பிரதான எதிர்க்கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை கோரிக்கை விடுத்தன.
எனினும், பாதுகாப்பு காரணங்களால் தற்போதைக்கு லோக்சபா தேர்தல் மட்டுமே நடக்கும் என்றும், சட்டசபை தேர்தல் பின் நடத்தப்படும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
மறு வரையறை செய்யப்பட்ட தொகுதிகளின்படி, ஜம்மு - காஷ்மீரில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக் - ரஜோரி மற்றும் ஜம்மு பிராந்தியத்தில், உதம்பூர், ஜம்மு ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த ஐந்து தொகுதிகளுக்கும் தலா ஒரு தொகுதி என, லோக்சபா தேர்தலின் முதல் ஐந்து கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் வரலாற்றில், கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த தேர்தலில், ஜம்மு - காஷ்மீரில் அதிகளவில் ஓட்டுப்பதிவு பதிவாகி உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இது குறித்து, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீரில் ஐந்து லோக்சபா தொகுதிகளில் பதிவான மொத்த ஓட்டுப்பதிவு, 58.46 சதவீதம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று தொகுதிகளில், 2019ல் நடந்த தேர்தலில், வெறும் 19.16 சதவீத ஓட்டுகளே பதிவாகின.
இது, தற்போது 30 சதவீதம் அதிகரித்து, 50.86 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஜம்மு பிராந்தியத்தில் உள்ள இரு தொகுதி களில், 70 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜம்மு - காஷ்மீரில் அதிகளவில் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. அதே போல், 2019 தேர்தலை காட்டிலும், இங்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
இத்தேர்தலில், 18 - 59 வயதுக்குட்பட்டோர் அதிகளவில் ஓட்டளித்துள்ளனர். இது, ஜனநாயகத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இது ஒரு நேர்மறையான மற்றும் மனநிறைவான வளர்ச்சியாகும். ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதற்கான செயல்முறை விரைவில் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் வாழ்த்து
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் - ரஜோரி லோக்சபா தொகுதியில், 2019ல், 14.3 சதவீத ஓட்டுகளே பதிவாகின. தற்போதைய தேர்தலில், 54.3 சதவீத ஓட்டுகள் பதிவாகிஉள்ளன.
இது குறித்து பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஜனநாயக கடமையாற்றி சாதனை படைத்த அனந்த்நாக் - ரஜோரி தொகுதியைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்' என, தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜம்மு - காஷ்மீரில் செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளின் காரணமாகவே, இங்கு ஓட்டுப் பதிவு அதிகரித்துள்ளதாக பா.ஜ., தலைவர்கள் தெரிவித்துஉள்ளனர்.