UPDATED : மே 29, 2025 10:31 PM
ADDED : மே 29, 2025 10:30 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளத தொடர்ந்து, பல மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை, நான்கு நாட்களுக்கு முன்னதாகவே துவங்கியது. இதனையடுத்து அங்கு பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்நிலையில், கண்ணூர், காசர்கோட் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மே 31 ம் தேதி வரை மழை தொடரும். பல இடங்களில் பலத்தகாற்று வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்து உள்ளது. கடலோர மாவட்டங்களில் அலை அதிக உயரத்துக்கு எழும்பும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், இடுக்கி, வயநாடு, திரிச்சூர், மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், இம்மாவட்டங்களில் நடைபெற இருந்த தேர்வு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, கடந்த 24 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் 6 வீடுகள் முற்றிலும்,56 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன.
கதஷிகடவு பகுதியில் மழை காரணமாக வழுக்கிவிழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கண்ணூரின் செருவன்சேரி பகுதியில் 15 செ.மீ.,
இடுக்கியின் பீர்மேட்டில் 13 செ.மீ.,
வயநாட்டின் வைத்திரியில் 12 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.