கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
UPDATED : ஜூன் 16, 2025 01:43 AM
ADDED : ஜூன் 15, 2025 08:58 PM

திருவனந்தபுரம்: கேரளாவுக்கு 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், இன்று( ஜூன் 16) 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜூன் 18ம் தேதி வரை கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வடக்கு மாவட்டங்களான காசர்கோடு, வயநாடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 16) ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காசர்கோடு, வயநாடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிசூர், பத்தினம்திட்டா, ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 18ம் தேதி வரையிலான கனமழை எச்சரிக்கை விபரம்
ரெட் அலர்ட்
ஜூன் 17; மலப்புரம், கோழிக்கோடு
ஆரஞ்ச் அலர்ட்
ஜூன் 17; பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு,
ஜூன் 18; பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு
மஞ்சள் அலர்ட்
ஜூன் 17; திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா
ஜூன் 18; திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, திரிசூர்