ADDED : ஆக 31, 2025 09:24 PM

சிம்லா: ஹிமாச்சல் மாநிலத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று முதல்(ஆகஸ்ட்31) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அதி கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
மாநிலத்தின் உனா, பிலாஸ்பூர், சிம்லா, சோலன் மற்றும் சிர்மெளர் ஆகிய பகுதிகளில், நாளையும்( செப்டம்பர் 1) சம்பா, காங்க்ரா, குல்லு மற்றும் மண்டி ஆகிய இடங்களில் நாளை மறுதினம்( செப்டம்பர் 2) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலச்சரிவு, திடீர் வெள்ளம், நிலச்சரிவு, நீர் தேங்குதல் மற்றும் நீர்நிலைகள் நிரம்புவது குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் 72 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பருவத்தின் சராசரியான 256.8 மி.மீ. மழைக்கு பதிலாக 440.8 மி.மீ. மழை பெய்துள்ளது. குலு (162 சதவீதம்), சிம்லா (126 சதவீதம்), உனா (121 சதவீதம்), சோலன் (118 சதவீதம்) மற்றும் சம்பா (104 சதவீதம்) ஆகிய 5 மாவட்டங்களில் இந்த உபரி 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.