தானா நகர்ந்து வரும் டானா புயல்! ரெட் அலர்ட்டில் ஒடிசா, மேற்கு வங்கம்
தானா நகர்ந்து வரும் டானா புயல்! ரெட் அலர்ட்டில் ஒடிசா, மேற்கு வங்கம்
ADDED : அக் 23, 2024 11:53 AM

புதுடில்லி: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் அதே வேளையில் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு நிலையாக மாறியது. பின்னர் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறி இருப்பதால் டானா, என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
வடமேற்கு திசையில் டானா புயல் நகர்ந்து தீவிர புயலாக உருப்பெற்று,வரும் 25ம் தேதி ஒடிசாவின் புரி, மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தற்போது டானா புயல் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. புயல் பாதிப்பு என்று கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டு உள்ளனர்.
புயல் எதிரொலியாக, ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் 150க்கும் அதிகமான ரயில் சேவைகளையும் முன் எச்சரிக்கையாக ரத்து செய்து அறிவிப்பும் வெளியிட்டு உள்ளது.