சத்திரம், - புல்மேடு காட்டுப்பாதையில் பக்தர்கள் செல்லும் நேரம் குறைப்பு
சத்திரம், - புல்மேடு காட்டுப்பாதையில் பக்தர்கள் செல்லும் நேரம் குறைப்பு
ADDED : ஜன 10, 2025 02:39 AM
மூணாறு:சத்திரம், புல்மேடு காட்டுப்பாதையில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் செல்லும் நேரத்தை குறைத்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
கேரளா இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகில் உள்ள சத்திரம், புல்மேடு மற்றும் அழுதகடவு, முக்குழி ஆகிய பகுதிகள் வழியாக காட்டுப்பாதையில் நடந்து பக்தர்கள் சபரிமலைக்கு செல்லலாம். அந்த பாதைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
சத்திரம், புல்மேடு வழியாக நேற்று முன்தினம் வரை 1,15,527 பேர் சென்றனர். மகரவிளக்கு தரிசனம் நெருங்குவதால் காட்டுப்பாதைகளில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சத்திரம், புல்மேடு வழியாக செல்ல காலை 7:00 முதல் மதியம்1:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் சன்னிதானம் செல்லும்போது இருள் சூழ்ந்து வெகு நேரம் ஆகுவதுடன், சிலர் தளர்ந்தும், வழி தப்பியும் செல்கின்றனர்.
இப்பிரச்னை குறித்து உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அது குறித்து பெரியாறு புலிகள் காப்பகம் வெஸ்ட் டிவிஷன் உதவி இயக்குனர் ஆய்வு நடத்தி இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரியிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
ஒருமணி நேரம் குறைப்பு
அதன்படி சத்திரம், புல்மேடு காட்டுப் பாதையில் பக்தர்கள் செல்லும் நேரத்தை பாதுகாப்பு கருதி காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை என ஒருமணிநேரம் குறைத்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதேசமயம் அழுதகடவில் இருந்து காலை 7:00 முதல் மதியம் 3:30 மணி வரை, முக்குழியில் இருந்து காலை 7:00 முதல் மாலை 4:00 மணி வரை வழக்கம்போல் பக்தர்கள் சபரிமலை செல்லலாம்.

