ரயில்களில் 4 பெட்டிகள் குறைப்பு தங்கவயல் பயணியர் பெரும் அவதி
ரயில்களில் 4 பெட்டிகள் குறைப்பு தங்கவயல் பயணியர் பெரும் அவதி
ADDED : டிச 24, 2024 06:32 AM

தங்கவயல்: தங்கவயல் மாரிகுப்பத்தில் இருந்து கே.எஸ்.ஆர்., பெங்களூருக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் நான்கு பெட்டிகளை குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணியர் பெரிதும் அவதிப்பட்டனர்.
மாரிகுப்பத்தில் இருந்து கே.எஸ்.ஆர்., பெங்களூருக்கு அதிகாலை 4:20 மணி, காலை 6:25, 8:00, 9:40, மதியம் 1:40, 3:10 இரவு 9:30 மணிக்கு என ரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து ரயில்களும் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டன.
முன்னறிவிப்பின்றி, நேற்று முன்தினம் முதல் 12 பெட்டிகளாக குறைக்கப்பட்டது. இதனால் பயணியர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
*தினப்பயணம்
தங்கவயலில் இருந்து 15,000க்கும் மேற்பட்டோர், பல்வேறு வேலைகளுக்காக தினமும் பெங்களூருக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் இரண்டு மணி நேரம் நெரிசலில் நின்று பயணம் செய்கின்றனர். இதன் பின், கடினமான பல்வேறு வேலைகளை செய்ய வேண்டும். மறுபடியும் ரயிலில் நெரிசலில் சிக்கி பயணம் செய்து, வீடு திரும்ப வேண்டும்.
இப்படி ஓய்வின்றி உடல் நலத்தை கெடுத்து, வாழ்வாதாரத்துக்காக வேலைக்குச் சென்று வருகின்றனர். இது தினப் பயணியர் பாதிப்பு என்றால், பல்வேறு நோயாளிகள் சிகிச்சைக்காக மாரி குப்பம் ரயிலில் பயணம் செய்கின்றனர்.
*கொடுமை
நோயாளிகள் நின்று கொண்டே பயணம் செய்ய முடியுமா? சிகிச்சைக்காக ரயிலில் தொங்கிக்கொண்டு செல்ல முடியுமா? கை குழந்தைகளை வைத்துக் கொண்டும், முதியோரும் சொல்லொண்ணா கொடுமைக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பயணியர் கோருகின்றனர்.
இதுகுறித்து ரயில் பயணியர் ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் மதலை முத்து கூறியதாவது:
தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா கூறியதன் பேரில், தென்மேற்கு ரயில்வே மண்டல மேலாளரை தொடர்பு கொண்டேன். ரயில் பெட்டிகள் குறைப்பு பாதிப்புகளை தெரிவித்தேன்.
இதற்கு அவர், 'இந்த முடிவை நாங்களாக எடுக்கவில்லை. மத்திய அரசு உத்தரவின் பேரில், அனைத்து ரயில்களில் நான்கு பெட்டிகள் குறைக்கப்பட்டன. இதன் மூலம் வட மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவுக்காக சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்றார்.
இம்மாதம் 27ம் தேதி மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா, மண்டல மேலாளர் ஆகியோரை எம்எல்.ஏ., ரூபகலா சந்திப்பார். விரைவில் பிரச்னை தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆபத்தான பயணம்
குடும்பத்துடன் பெங்களூரில் நடக்கும் நிகழ்ச்சிக்கு ரயிலில் சென்றோம்; நிற்க இடமில்லை. ரயில் பெட்டிகளின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலைமையை பார்த்தேன். மிகவும் ஆபத்தானது. பாதுகாப்பு இல்லாத பயணமாக இருந்தது.
ஆர்.வி.குமார்,
என்.டி.பிளாக்,
உரிகம்
மனித நேயம்
மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்வதற்காக ரயிலில் இட நெருக்கடியில் கொடுமையை அனுபவித்தனர். மனிதநேயத்துடன் இளைஞர்கள் சிலர் முதியோருக்கும், நோயாளிகளுக்கும் இருக்கை அளித்து நின்றவாறே பயணம் செய்தனர்.
-மகேந்தர், தங்கவயல்
மிகவும் கஷ்டம்
நெருக்கடியால் குழந்தைகளையும், லக்கேஜ்களையும் எடுத்துக் கொண்டு செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டோம். ரயிலில் ஏறவும், இறங்கவும் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த பாதிப்புகளை மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு சரி செய்ய வேண்டும்.
-சரஸ்வதி,
சாம்பியன்