ADDED : டிச 17, 2024 04:58 AM

பெங்களூரு: சுற்றுச்சூழலுக்கு தகுந்த எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் எலக்ட்ரிக் வாகனங்களின் பதிவு குறைந்து வருகிறது.
இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில், 3.50 கோடி வாகனங்கள் உள்ளன. இவற்றில் 10 சதவீதம் எலக்ட்ரிக் வாகனங்களாகும். சில ஆண்டுகளாக, எலக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால் 2023 உடன் ஒப்பிட்டால், நடப்பாண்டு எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு ஓரளவு குறைந்துள்ளது. வரும் ஆண்டுகளில், இந்த எண்ணிக்கையே அதிகமாக இருக்கும்.
பஸ், ஆட்டோ, கார் உட்பட மற்ற வர்த்தக போக்குவரத்து வாகனங்கள் வாங்கினால், ஆண்டு தோறும் வரி செலுத்த வேண்டிய அவசியமும் இருக்காது. வாங்கும் போதும், 25 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையுள்ள கார் வாங்கினால் மட்டுமே, காரின் மொத்த விலையில் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
முதலிடம்
எலக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் பாயின்ட் அமைப்பதில், நாட்டிலேயே கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது. பெங்களூரிலேயே 4,462 சார்ஜிங் பாயின்டுகள் உள்ளன. பெஸ்காம், வெவ்வேறு தனியார் நிறுவனங்கள், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சார்ஜிங் பாயின்டுகள் அமைத்துள்ளன.
விரைவில் 2,500 சார்ஜிங் பாயின்டுகள் அமைக்கப்படும் என, மாநில அரசு பட்ஜெட்டில் அறிவித்திருந்தன. மாநிலத்தின் மங்களூரு, ராம்நகர், தாவணகெரே, பெங்களூரு, மைசூரு தேசிய நெடுஞ்சாலைகள், சுற்றுலா தலங்களில் சார்ஜிங் பாயின்டுகள் அமைக்கப்படும். இது வாகன பயணியருக்கு பெரும் உதவியாக இருக்கும்.
டிராக்டர்கள்
ஒரு முறை சார்ஜ் செய்தால், எலக்ட்ரிக் கார்களில் குறைந்தபட்சம் 200 கி.மீ., பயணிக்கலாம். 300 கி.மீ., 400 கி.மீ., பயணிக்கும் கார்களும் கூட மார்க்கெட்டுக்கு வந்துள்ளன. கார், பைக்குகள் மட்டுமின்றி தற்போது எலக்ட்ரிக் டிராக்டர்களும் வந்துள்ளன. பி.எம்.டி.சி., - கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் எலக்ட்ரிக் பஸ்கள் உள்ளன.
இம்மாதம் டிசம்பர் முதல் 10 நாட்களில், 4,749 இரு சக்கர வாகனங்கள், 2,597 நான்கு சக்கர வாகனங்கள் பதிவாகின.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.