எளிமையின் மறு உருவம்: ஏழைகளின் பங்காளன்: இன்று முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள்
எளிமையின் மறு உருவம்: ஏழைகளின் பங்காளன்: இன்று முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள்
UPDATED : ஜூன் 18, 2024 12:13 PM
ADDED : ஜூன் 18, 2024 11:58 AM

சென்னை: எளிமையின் மறு உருவம், ஏழைகளின் பங்காளன் என புகழப்படும் முன்னாள் அமைச்சர் கக்கனின் பிறந்த நாள் இன்று.
மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் பிறந்தவர் அப்பழுக்கற்ற அரசியல்வாதி, காந்தியவாதி, காங்கிரஸ்காரர் கக்கன். காமராஜ், பக்தவச்சலம் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர். ஐந்தாண்டுகள் லோக்சபா உறுப்பினராகவும் இருந்தார். என்றாலும் குடியிருக்க வீடில்லாமல் வாடகை வீட்டில் வாழ்ந்தார். அரசு பஸ்சில் பயணம் செய்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவரது கடைசிகாலம் கழிந்தது.
பொதுவாழ்வில் தூய்மையும், நேர்மையும், செயல்திறனும் கொண்டு அரசுப்பணியை மக்கள் பணியாக நேர்த்தியாக செய்தவர். அமைச்சரானதும் மதுரை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஓராசிரியர் பள்ளியை நிறுவ முதல் உத்தரவை பிறப்பித்தார். மதுரையின் பெருமைகளில் ஒன்றான விவசாயக்கல்லூரி அமைய காரணமானவர். ஊழலற்ற, நேர்மையான, தலையீடுகள் இல்லாத நிர்வாகத்திற்கு உதாரணமாக திகழ்ந்த கக்கன், இன்று நம் 'கனவு அரசியல்வாதி'. மக்கள் சேவைக்கு வருபவர்கள் இவர் போல் இருக்கமாட்டார்களா என்று நாம் ஏங்க வேண்டி உள்ளது.
கக்கனின் பொதுவாழ்வு தூய்மையை அறிய, அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் இளசை சுந்தரம் எழுதிய 'தியாகசீலர் கக்கன்' என்ற புத்தகத்தில் இருந்து சில...
தங்கப்பேனா தகுதிக்கு மீறியது
ஒருமுறை மலேசிய அமைச்சர், கக்கனை சந்தித்தார். கக்கன் வைத்திருந்த பழமையான பேனாவை பார்த்து விட்டு, தனது பேனாவை அவர் தந்தார். அந்த தங்கப்பேனாவை வாங்க மறுத்த கக்கன், அந்த தகுதி தனக்கு இல்லை என்றார். எனினும் விடாப்பிடியாக அவர் தர, வேறு வழியில்லாமல் பெற்றுக்கொண்ட கக்கன், ஊழியரை அழைத்து அதனை அலுவலக புத்தகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். 'இது அரசுக்கு அல்ல; உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு தான் தந்தேன்' என்று மலேசிய அமைச்சர் கூறியும் கக்கன் கேட்கவில்லை.
'நான் அமைச்சராக இல்லை என்றால் இந்த தங்கப்பேனாவை தந்திருப்பீர்களா? மக்களுக்கு தொண்டாற்ற பொறுப்பேற்றுள்ள நம்மை போன்றவர்கள் பரிசுப்பொருட்களை சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ள கூடாது' என்றார் கக்கன்.'உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளாமல், அரசுப்பொருட்களோடு சேர்ப்பதாக இருந்தால் தரமாட்டேன்' என அந்த அமைச்சர் கூற 'நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்' என்று தங்கப்பேனாவை திருப்பி தந்து விட்டார் கக்கன்.கறைபடாத கரத்திற்கு சொந்தக்காரர் கக்கன் என்பதற்கு இந்த சம்பவம் சிறு உதாரணம்.
மனைவி என்றாலும்
ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, கக்கன் வீடு திரும்பும் போது அவரது வீட்டிற்கு அரசு ஊழியர் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்கி வருவதை கண்டார். 'யார் வாங்கி வரச்சொன்னது' என்று கக்கன் கேட்க, 'அம்மா தான்(கக்கன் மனைவி) வாங்கி வரச்சொன்னார்' என்று ஊழியர் கூற, மனைவியை அழைத்து அவர்கள் முன்னிலையில் சத்தமிட்டார். 'இவர் யார் தெரியுமா? அரசு ஊழியர். உனக்கு ஊழியம் செய்பவர் அல்ல' என்று திட்டி தீர்க்க கண்ணீர் மல்க நின்றார் கக்கன் மனைவி. 'அதோ ரோட்டில் மண்ணெண்ணெய் கேன் உள்ளது. நீயே வீட்டிற்கு எடுத்துப்போ' என்றார். அரசு ஊழியர்கள் அரசுப்பணியை மட்டுமே செய்ய வேண்டும் என்பது கக்கன் கருத்து.