UPDATED : நவ 28, 2024 10:37 PM
ADDED : நவ 28, 2024 10:26 PM

புதுடில்லி: இந்தியா கனடா இடையிலான உறவு இன்னும் சிக்கலானதாகவே உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியா - கனடா இடையிலான உறவு தொடர்பாக பார்லிமென்ட் குழுவிற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அளித்த தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியா கனடா இடையிலான நிலையான உறவுக்கு பிராந்திய ஒற்றுமை மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும் என தொடர்ந்து கனடாவிடம் வலியுறுத்தி வருகிறோம்.
கனடாவில் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாக அவர்கள் தெரிவிக்கும் புகார்களை அந்நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.
இந்தியாவிற்கு எதிரான திட்டங்களுடன் செயல்படும் பிரிவினைவாதிகளுக்கு கனடா அரசியல் ரீதியில் அடைக்கலம் கொடுத்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இன்னும் சவால் ஆனதாகவே உள்ளது.
பிரிவினைவாதிகள், இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட தலைவர்களை கொச்சைப்படுத்துவதை தடுக்கவும், தற்போதைய அரசியல் தலைவர்கள் மற்றும் தூதர்களுக்கு மிரட்டல் விடுப்பதை தடுத்தல் மற்றும் வழிபாட்டு தலங்களை இழிவுபடுத்துதல் மற்றும் சேதப்படுத்துதல் ஆகியவற்றை தடுக்கவேண்டும். அந்நாட்டு மண்ணில் செயல்படும் இத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கனடாவை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.