யுஏஇ சென்றார் பிரதமர் மோடி: அபுதாபியில் சுவாமி நாராயணன் கோவிலை திறக்க உள்ளார்
யுஏஇ சென்றார் பிரதமர் மோடி: அபுதாபியில் சுவாமி நாராயணன் கோவிலை திறக்க உள்ளார்
UPDATED : பிப் 14, 2024 11:36 AM
ADDED : பிப் 13, 2024 11:59 AM

புதுடில்லி: பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமீரேட்ஸ் (யுஏஇ) சென்றார். முன்னதாக, மோடி வெளியிட்ட அறிக்கையில், ‛‛ இந்தியா, யுஏஇ., இடையிலான உறவு பல மடங்கு வளர்ந்துள்ளது'' என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.,13) சென்றார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை நாளை அவர் திறந்து வைக்கிறார்.
இன்று மாலை சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தெரிகிறது. 'அஹலான் மோடி' அதாவது 'வணக்கம் மோடி' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்க, எமிரேட்சின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 60,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர்.
பெருமிதம்
இதனிடையே, யு.ஏ.இ., கிளம்பும் முன்னர் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
பல்வேறு துறைகளில், யு.ஏ.இ.,உடனான இந்தியாவின் ஒத்துழைப்பு கடந்த 9 ஆண்டுகளில் பல மடங்கு வளர்ந்துள்ளது. அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இரு நாட்டு உறவும் இன்னும் வலுப்பெற்று வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டிற்கு பிறகு யுஏஇ.,க்கு பிரதமர் செல்வது இது 7வது முறை. மேலும், கடந்த 8 மாதங்களில் 3வது முறையாக அங்கு சென்றார்.