'பனீர்' பரிமாறாததால் மண பந்தலுக்குள் பஸ்சை ஓட்டி வந்து மோதிய உறவினர்
'பனீர்' பரிமாறாததால் மண பந்தலுக்குள் பஸ்சை ஓட்டி வந்து மோதிய உறவினர்
ADDED : ஏப் 30, 2025 12:46 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில், திருமண விருந்தின் போது பனீர் எனப்படும் பாலாடைக்கட்டி சேர்க்கப்பட்ட உணவு வகை ஏதும் பரிமாறப்படாததால் ஆத்திரமடைந்த உறவினர், மண பந்தலுக்குள் மினி பஸ்சை ஓட்டிச் சென்று மோதினார்.
வரவேற்பு நிகழ்ச்சி
உ.பி.,யின் சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஹமீத்பூர் கிராமத்தில் ராஜ்நாத் யாதவ் என்பவரின் மகளுக்கும், வாரணாசியின் பஹாடி கிராமத்தைச் சேர்ந்த மணமகனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
அதற்கு முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பங்கேற்று, மணமக்களை வாழ்த்திச் சென்றனர். அப்போது மணப்பெண் வீட்டு உறவினர் ஒருவர் தாமதமாக நிகழ்ச்சிக்கு வந்தார்.
நேராக உணவு பந்தலுக்கு சென்று சாப்பிட துவங்கினார். தனக்கு பிடித்த உணவான பனீரை பரிமாறும்படி கேட்டுள்ளார். அதற்கு, பனீர் உணவு எதுவும் விருந்தில் இடம்பெறவில்லை என விருந்தினர்கள் கூறியுள்ளனர்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த அந்த உறவினர், தான் வந்த மினி பஸ்சை நேரடியாக ஓட்டிச் சென்று மணப்பந்தலில் மோதினார். இதைப் பார்த்து திருமணத்திற்கு வந்தவர்கள் அலறிஅடித்து சிதறி ஓடினர்.
இந்த சம்பவத்தில் மணமகனின் தந்தை, மணப்பெண்ணின் மாமா உட்பட பலர் காயமடைந்தனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த நாற்காலி, ஏர்கூலர் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
போலீசில் புகார்
காயமடைந்தவர்கள் வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பஸ்சை மோதச் செய்தவர் மீது மணப்பெண் வீட்டார் போலீசில் புகாரளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார், புகார் தந்தால் தான் திருமணம் என கூறிவிட்டனர்.
இதையடுத்து, உறவினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது; போலீசார் வழக்கு பதிந்தனர். அதன்பின் மறுநாள் திருமணம் நடந்தது.

