5 வயது சிறுவன் தலை துண்டித்து கொலை; கொலையாளியை அடித்து கொன்ற உறவினர்கள்
5 வயது சிறுவன் தலை துண்டித்து கொலை; கொலையாளியை அடித்து கொன்ற உறவினர்கள்
ADDED : செப் 28, 2025 06:59 AM

தார் : மத்திய பிரதேசத்தில் தாய் கண் முன்னே 5 வயது சிறுவனின் தலையை துண்டித்து கொடூரமாக கொன்று தப்ப முயன்ற கொலையாளியை, உறவினர்கள் சரமாரியாக தாக்கி கொன்றனர்.
இருசக்கர வாகனம் மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள ஆலி கிராமத்தைச் சேர்ந்தவர் காலு சிங்.
இவரது மகன் விகாஸ், 5. நேற்று முன்தினம் காலு சிங் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் ஒருவர் வந்தார்.
வீட்டுக்குள் நுழைந்த அவர், அங்கு தொங்கிக் கொண்டிருந்த கத்தியை எடுத்து, விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் விகாஸ் தலையை துண்டித்தார்.
அதை தடுக்க வந்த சிறுவனின் தாயை கத்தியால் குத்தியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது.
தாயின் கண் முன்னே சிறுவன் துடிக்க துடிக்க உயிரிழந்தான்.
தொடர்ந்து சிறுவனின் தலையில்லா உடலை சரமாரியாக கிழித்த அந்த நபரின் செயலை பார்த்து தாய் கூச்சலிட்டார்.
இதனால் விரைந்து வந்த உறவினர்கள், கொலையாளியை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
விசாரணை இது பற்றி அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொலையாளியை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அந்த நபர் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், சிறுவனை கொலை செய்த நபர், பக்கத்து மாவட்டமான அலிராஜ்பூரின், ஜோபாத் பாக்டி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ், 25, என தெரிய வந்தது.
அவர் மூன்று நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியதும், ஆலி கிராமத்துக்குள் நுழைந்து கொலை செய்வதற்கு முன், அங்குள்ள கடையொன்றில் பொருளை திருட முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.