ADDED : ஜூலை 26, 2024 05:55 PM

பெங்களூரு: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 741 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் குடகு, மைசூரு உள்ளிட்ட காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால், காவிரி ஆற்றில் நீர் திறந்து விடபடும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. தற்போது, 1,30,741 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
கேஆர்எஸ் அணையில் இருந்து 1,00,741 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.
ஒகேனக்கல்
தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 95 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு உள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.