'எமர்ஜென்சி' ரிலீஸ் இல்லை: கங்கனா படத்துக்கு தொடரும் சிக்கல்!
'எமர்ஜென்சி' ரிலீஸ் இல்லை: கங்கனா படத்துக்கு தொடரும் சிக்கல்!
UPDATED : செப் 02, 2024 09:40 AM
ADDED : செப் 02, 2024 09:33 AM

புதுடில்லி: கங்கனா ரனாவத் நடித்துள்ள 'எமர்ஜென்சி' படத்தில் சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரித்ததாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்திய போது மக்கள் கேட்ட, அனுபவித்த வார்த்தை. அந்த வரலாற்றை மையமாக கொண்டு எமர்ஜென்சி என்ற பெயரில் படத்தை தயாரித்து பிரபல நடிகை கங்கனா ரனாவத் இயக்கி உள்ளார். இந்திராவின் அரசியல் நடவடிக்கைகள், எமர்ஜென்சி அமலான போது நிகழ்ந்தவை, அவர் சுட்டுக்கொல்லப்பட்ட போது அரங்கேறிய சம்பவங்கள் படத்தில் காட்சிகளாக வருகிறது. படத்தில் சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரித்ததாகவும் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
சில காட்சிகளை நீக்குங்க!
டிரெய்லர் வெளியீடு பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வாரியத்திடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. செப்டம்பர் 6ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி என்று அறிவிக்கப்பட்டு, தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் இன்னும் சில காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் உத்தரவிட்டதால், படத்தை குறித்த தேதியில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக படக்குழுவினர் கேட்டபோது, ஒவ்வொரு சமூகத்தினரின் உணர்வுகளையும் கருத்தில் கொள்வதாக தணிக்கை வாரியம் கூறியுள்ளது.
மிகவும் வருத்தம்
சமீபத்தில், 'இந்திரா கொலை, பிந்திரன்வாலே, பஞ்சாப் கலவரம் போன்ற சம்பவங்களை படத்தில் காட்டக்கூடாது என்று எங்களுக்கு அழுத்தம் வருகிறது. படத்தில் என்ன காட்சி அமைப்புகள் இடம்பெற்று உள்ளன என்ற கேள்வியும் பலமாக எழுகிறது. என்னால் எதையும் நம்பமுடியாத தருணமாக உள்ளது. நாட்டில் தற்போது நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வருத்தம் அளிக்கிறது' என கங்கனா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.