மத்திய அரசுக்கு எதிரான நிவாரண நிதி வழக்கு: அவசரமாக விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை
மத்திய அரசுக்கு எதிரான நிவாரண நிதி வழக்கு: அவசரமாக விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை
ADDED : மே 07, 2024 05:10 AM

புதுடில்லி: வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை அவசரமாக விசாரிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியுள்ளது.
தமிழகத்தில், வெள்ளம் மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்தாண்டு டிசம்பரில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, 19,692 கோடி ரூபாயும், டிசம்பரில் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, 18,214 கோடி ரூபாயும் நிவாரண நிதி வழங்கும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது.
மத்திய அரசின் பல்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்த பிறகும், பலமுறை நினைவூட்டல் அனுப்பியும், இந்த நிவாரண தொகையை மத்திய அரசு விடுவிக்கவில்லை.
அதனால், உடனடியாக இந்தத் தொகையை விடுவிக்க மத்திய அரசுக்குஉத்தரவிட வேண்டும். மேலும் உடனடியாக, 2,000 கோடி ரூபாயை தரும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில், தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், இதை நேற்று குறிப்பிட்டார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கும்படி வலியுறுத்தினார்.
விசாரணை பட்டியலில் அதை விரைவில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என, அமர்வு கூறியுள்ளது.