ADDED : ஜன 18, 2024 02:11 AM
கோல்கட்டா:மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் வரும் 22ம் தேதி, ஆளும் திரிணமுல் கட்சி சார்பில் மத நல்லிணக்க பேரணி நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜன.,22ல் நடத்தப்படுகிறது.
அதே நாளில், கோல்கட்டாவில் அனைத்து மதத்தினர் பங்கேற்கும் நல்லிணக்க பேரணி நடத்தப்பட உள்ளதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தெற்கு கோல்கட்டாவின் காளி காட் கோவிலில் வரும் 22ல் காளி தேவியை தரிசித்து விட்டு ஹஜரா கிராசிங் பகுதியில் மத நல்லிணக்க பேரணியை துவக்கி வைக்கிறேன். இந்த பேரணியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பர். இந்த நிகழ்ச்சிக்கு வேறெந்த நிகழ்ச்சியுடன் தொடர்பு இல்லை.
திரிணமுல் காங்., ஏற்பாடு செய்துள்ள இந்த பேரணி மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் உள்ளிட்ட பல்வேறு மத வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதி வழியாக சென்று பார்க் சர்க்கஸ் மைதானத்தை அடைகிறது.
இது போன்ற நிகழ்ச்சிகளை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன். கும்பாபிஷேகம் நடத்துவது நம் வேலையல்ல.
அது பூஜாரிகளின் வேலை. உள்கட்டமைப்பை உருவாக்குவதே அரசியல்வாதிகளின் வேலை.
இவ்வாறு அவர் கூறினார்.