ஆரோக்கியமான விலங்குகள் இன சேர்க்கைக்காக இட மாற்றம்
ஆரோக்கியமான விலங்குகள் இன சேர்க்கைக்காக இட மாற்றம்
ADDED : பிப் 24, 2026 11:35 PM
புதுடில்லி:மிருகக்காட்சி சாலைகளுக்கு இடையே விலங்குகள் பரிமாற்றம் செய்யப்படும் திட்டத்தின் கீழ், பீஹார் மாநிலம் பாட்னாவிலிருந்து புலி ஒன்று, டில்லிக்கு வரவுள்ளது. அதற்கு பதிலாக, பெண் வெள்ளைப்புலி அங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
டில்லி மிருகக்காட்சி சாலையின் இயக்குநர் சஞ்சீத்குமார், நேற்று கூறியதாவது:
ஆரோக்கியமான இனச்சேர்க்கை மற்றும் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், இந்த முயற்சி கடந்த சில ஆண்டுகளாக நடைபெறுகிறது.
பீஹாரின் பாட்னாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இருந்து புலி ஒன்று, டில்லி மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதுபோல, நான்கு முதலைகள், தலா, இரண்டு ஜோடி ஓநாய்கள் அங்கிருந்து வரவுள்ளன.
அதற்கு பதிலாக, மணிப்பூர் மான், பெண் புலி, நாரைகள், ஒயிட் பெலிகான் பறவைகள், பிளாக் பக் மான்கள் போன்றவை அங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
டில்லி மிருகக்காட்சி சாலையில் தற்போது, 13 புலிகள் மற்றும் அதன் குட்டிகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில், ஏழு ராயல் பெங்கால் வகை புலிகள், ஆறு வெள்ளை புலிகள். ஆண் புலிகளை விட பெண் புலிகள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆண் புலிகளில் பல வயதானவை.
அவ்வப்போது இதுபோன்ற விலங்குகள் பரிமாற்றம் செய்யப்படுவதால், ஆரோக்கியமான இனச்சேர்க்கைகள் கிடைக்கின்றன.
கடந்த ஆண்டும், இதுபோல ஏராளமான விலங்குகள், அருகில் உள்ள மிருகக்காட்சி சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிறிய விலங்குகளை பிற மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு செல்வதும் எளிது.
இவ்வாறு அவர் கூறினார்.

