லஞ்ச புகார் அளிப்பதில் தயக்கம் லோக் ஆயுக்தா எஸ்.பி., கேள்வி
லஞ்ச புகார் அளிப்பதில் தயக்கம் லோக் ஆயுக்தா எஸ்.பி., கேள்வி
ADDED : பிப் 16, 2024 07:19 AM

தங்கவயல்: ''தங்கவயலில் எங்கும், எதிலும், லஞ்சம், ஊழல், முறைகேடு நடப்பதாக சொல்கின்றனரே தவிர, பொதுமக்கள் புகார் அளிக்க முன் வருவதில்லையே,'' என, கோலார் மாவட்ட லோக் ஆயுக்தா எஸ்.பி., உமேஷ் வருத்தம் தெரிவித்தார்.
தங்கவயல் நகராட்சி அரங்கில், நேற்று முன் தினம், லோக் ஆயுக்தா எஸ்.பி., உமேஷ் முன்னிலையில் மக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது.
பெரும்பாலும் வருவாய்த் துறைக்கு உட்பட்ட நிலம் மோசடி, ஆக்கிரமிப்பு, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை, என பல்வேறு தகராறு தொடர்பாக 14 பேர் புகார் மனு அளித்தனர். இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
கருப்பு கிரானைட்
தங்கவயல் நகராட்சி முன்னாள் தலைவர் தயானந்தா, பா.ஜ., பிரமுகர் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து அளித்த புகார் மனுவில், 'தங்கவயல் தொகுதிக்கு உட்பட்ட என்.ஜி.ஹுல்கூர் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த கத்ரிநத்தம் என்ற கிராமத்தில் அரசுக்கு சொந்தமான, அரசு நிலம் 25 ஏக்கரில், 2 ஏக்கரில் மலையை குடைந்து 'கருப்பு கிரானைட்' எடுத்து சட்டவிரோதமாக ஆந்திராவுக்கு கடத்துகின்றனர். கர்நாடக மாநில கனிமம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தனர்.
லோக் ஆயுக்தா எஸ்.பி.: உங்கள் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உரிய துறை அதிகாரிகளுக்கு சிபாரிசு செய்யப்படும்.
ராபர்ட்சன்பேட்டை சேஷா பாபு: உரிகம் பேட்டையில் உள்ள பால சோமேஸ்வரர் கோவிலின் அதிகாரியாக 16 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அன்னவயல், இக்கோவிலுக்கு சென்று பொறுப்பை கவனித்ததே இல்லை. கோவிலுக்கு சொந்தமான கிரிஜா திருமண மண்டப வரவு விபரமும் தெரியவில்லை. இதனால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என மனு கொடுத்தார்.
லோக் ஆயுக்தா எஸ்.பி.,: ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.
இறப்பு சான்றிதழ்
சின்கோட்டே சீனிவாஸ்: என் தந்தை, தங்கவயல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மறுபடியும் தங்கவயல் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றார். எட்டு மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் காலமானார். அங்கேயே இறுதி சடங்கு நடத்தப்பட்டது. என் தந்தை இறப்பு சான்றிதழ் கேட்டு, பங்கார்பேட்டையில் மனுக் கொடுத்தேன். எங்கு இறந்தாரோ அங்கு சான்றிதழ் பெற்றுக் கொள்ளுங்கள் என கூறி திருப்பி அனுப்புகின்றனர். என் தந்தை இறந்தது பலருக்கும் தெரியும். ஆனால் இறப்பு சான்றிதழ் வழங்காமல் தகராறு செய்கின்றனர்.
பங்கார்பேட்டை தாசில்தார் ரேஷ்மி: பெங்களூரில் இறந்து, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். ஆனால், பங்கார்பேட்டையில் எப்படி சான்றிதழ் கொடுக்க முடியும்?
சீனிவாஸ்: அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இறப்பு சான்றிதழ் கேட்டபோது, ஆதார் கார்டு கேட்டனர். ஆதார் கார்டில், பெங்களூரு முகவரி இல்லை. பங்கார்பேட்டை தாலுகா சின்கோட்டை என இருந்ததால் தர மறுக்கின்றனர்.
அறிவுரை
லோக் ஆயுக்தா எஸ்.பி.,: இப்பிரச்னையில் உண்மை, நியாயம் உள்ளதை கருத்தில் கொண்டு சட்ட சிக்கல் வராமல், இறப்பு சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும்.
பின்னர் லோக் ஆயுக்தா எஸ்.பி., அளித்த பேட்டி:
ஒவ்வொரு தாலுகாவிலும் லோக் ஆயுக்தா சார்பில் மாதந்தோறும் இரண்டாம் புதன் கிழமை மக்கள் குறைகேட்பு முகாம் நடந்து வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு தங்கவயலில் நடத்தப்பட்டது.
இன்றைய முகாமில் 24 பேர் புகார் மனுக்கள் வழங்கினர். இதில் 14 மனுக்கள் வருவாய்த் துறை சம்பந்தப்பட்டது; 3 தாலுகா பஞ்சாயத்து; 2 கனிம, சுரங்கத் துறை: 5 சமூக நலத் துறைக்கு உட்பட்டது. கடந்த முறை 22 மனுக்கள் வந்தது. அவற்றில் 20 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
விரைவில் தீர்வு
தங்கவயல் தாலுகாவில் எங்கும், எதிலும், லஞ்சம், ஊழல், முறைகேடு நடப்பதாக சொல்கின்றனரே தவிர, பொதுமக்கள் புகார் அளிக்க முன் வருவதில்லை. இது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவில்லை. அரசு வேலைகளை செய்து தருவதில் அதிகாரிகள், ஊழியர்கள் மறுத்தாலோ, தகராறு செய்தாலோ, லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்தாலோ புகார் செய்தால், தீர்வு காணப்படும்.
ஊழல் அற்ற சமுதாயம் ஏற்படுத்த லோக் ஆயுக்தா உள்ளது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.