ADDED : அக் 05, 2024 04:58 AM
பெங்களூரு: பெங்களூரில் பல்வேறு சாலைகளில், மக்களின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் 3,000 மரங்கள், மரக்கிளைகள் உள்ளன. இவற்றை அகற்றும் பணியை மாநகராட்சி துவக்கி உள்ளது.
பெங்களூரின் பல்வேறு சாலைகளில் அபாயமான மரங்கள், மரக்கிளைகள் உள்ளன. சாலைகளில் செல்லும் வாகனங்கள் மீது விழுந்து, பயணியர் காயமடைந்த சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. வாகனங்கள் மீது விழுந்து, சேதப்படுத்துகின்றன.
நடப்பாண்டு மே மாதம், முதல்வர் சித்தராமையா நகர் வலம் வந்தபோது, சாலை ஓரத்தில் காய்ந்த மரங்கள் இருப்பதை பார்த்து, மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தார். இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
அதன்பின் மாநகராட்சி வனப்பிரிவு அதிகாரிகள் அபாயமான மரங்கள், மரக்கிளைகளை ஆய்வு செய்ய துவங்கினர்.
இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரில் உலர்ந்த மரங்கள், மரக்கிளைகள் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. காற்றில் வாகனங்கள் மீது விழுந்து சேதமாக்குகின்றன. இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து, புகார்கள் வந்துள்ளன.
இத்தகைய மரங்கள், மரக்கிளைகளை அடையாளம் காண, மாநகராட்சியின் வனப்பிரிவு முடிவு செய்தது.
ஆய்வு நடத்தியதில் 1,221 காய்ந்த மரங்கள், 1,951 மரக்கிளைகள் அபாய நிலையில் உள்ளதாக தெரிந்தது. மாநகராட்சி மற்றும் பெஸ்காம் அதிகாரிகள் இணைந்து மரங்கள், கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நடப்பாண்டு மரம், மரக்கிளைகள் விழுந்ததில், இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் இறந்தனர். 16 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டன. சிலர் நிரந்தரமாக ஊனமடைந்தனர்.
மரங்கள் விழுந்து காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை, மாநகராட்சியே ஏற்றுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.