விஜயேந்திராவை பதவியில் இருந்து நீக்குங்கள்: பா.ஜ., - எம்.பி., சுதாகரும் களத்தில் குதித்தார்
விஜயேந்திராவை பதவியில் இருந்து நீக்குங்கள்: பா.ஜ., - எம்.பி., சுதாகரும் களத்தில் குதித்தார்
ADDED : ஜன 30, 2025 07:10 AM

சிக்கபல்லாபூர்; ''கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால், பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து விஜயேந்திராவை நீக்க வேண்டும்,'' என்று சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர் திடீர் போர்க்கொடி துாக்கி உள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
சிக்கபல்லாபூர் மாவட்ட பா.ஜ., தலைவராக சந்தீப் ரெட்டி என்பவரை நியமித்து, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உத்தரவிட்டு உள்ளார். சந்தீப்பை தலைவராக நியமிப்பது பற்றி, நான் உட்பட சிக்கபல்லாபூர் மாவட்ட பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள் யாருடைய கருத்தையும் விஜயேந்திரா கேட்கவில்லை.
தனக்கு ஆமாம் சாமி போடுபவர்களுக்கு விஜயேந்திரா பதவி கொடுக்கிறார். பா.ஜ., துணை தலைவர், மாநில பொது செயலர் நியமனத்தில் தனது இஷ்டத்திற்கு விஜயேந்திரா செயல்பட்டு உள்ளார். கட்சி என்றால் ஒருவர் மட்டும் இல்லை. பலர் சேர்ந்து கட்டமைப்பது தான் கட்சி.
அரசியல் வாழ்க்கை
கடந்த 2019ல் எடியூரப்பாவை முதல்வராக்க, எனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தேன். அந்த நேரத்தில் எனது வீட்டிற்கு வந்த விஜயேந்திரா, பசவண்ணர் சிலை மீது கை வைத்து எனக்கு நிறைய வாக்குறுதி அளித்தார். ஆனால், அதில் ஒன்றை கூட அவர் நிறைவேற்றவில்லை.
சிக்கபல்லாபூரில் பா.ஜ.,வுக்கு செல்வாக்கு இல்லை. ஆனாலும், எனது அரசியல் எதிர்காலத்தை பணயம் வைத்து, காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தேன். கடந்த 2019 இடைத்தேர்தலில் என்னை தோற்கடிக்க முயன்றவரை, இப்போது மாவட்ட தலைவர் ஆக்கி உள்ளீர்கள்.
எடியூரப்பா ராஜினாமா செய்த பின், பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றினேன். இதனால் என் மீது விஜயேந்திராவுக்கு கோபம். எனது அரசியல் வாழ்க்கையை முடிக்க பார்க்கிறீர்கள்.
நிறைய அவமானம்
காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைவதற்கு முன்பு, முதல்வர் சித்தராமையா என்னிடம் பேசினார். 'எக்காரணம் கொண்டும் பா.ஜ.,வுக்கு செல்ல வேண்டாம். உங்களை பயன்படுத்தி கொண்டு நடுரோட்டில் விட்டு விடுவர்' என்று கூறினார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல், பா.ஜ.,வுக்கு வந்தேன். நான் இங்கு வந்ததில் இருந்து, நிறைய அவமானங்களை சந்தித்து உள்ளேன். இதுவரை ஊடகம் முன்பு பேசியது இல்லை. ஆனால் என் மனதை நோகடித்து உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் இயல்பாகவே எனக்கு தான் சீட் கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் என்னை சீட்டுக்காக அலைய விட்டனர். தேர்தலில் என்னை தோற்கடிக்க, விஜயேந்திராவுடன் இணைந்து செயல்படும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் முயன்றார். ஆனால் எட்டு சட்டசபை தொகுதி மக்களும் எனக்கு கை கொடுத்தனர். எங்கள் ஆதரவு இன்றி சிக்கபல்லாபூர், கோலாரில் உள்ள சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளரை விஜயேந்திராவால் வெற்றி பெற வைக்க முடியாது.
எதிராக கூட்டம்
விஜயேந்திரா மீது பல மாவட்ட பா.ஜ., தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். எம்.பி.,க்கள் சிலரும் கோபத்தில் உள்ளனர். விஜயேந்திராவுக்கு எதிராக கூட்டம் நடத்த எனக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் நான் செல்லவில்லை. சிக்கபல்லாபூர் மாவட்ட தலைவர் நியமனம் குறித்து எம்.பி., என்ற முறையில் என்னிடம் விஜயேந்திரா பேசவில்லை. அவரை சந்திக்க நான் மூன்று முறை அப்பாயின்ட்மென்ட் வாங்கினேன். ஆனால், என்னை சந்திக்காமல் உதாசீனப்படுத்தினார்.
பா.ஜ.,வின் கோட்டை என்று கூறப்பட்ட பீதர், கலபுரகி, சிக்கோடியில் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தோற்று போனது. இதற்கு விஜயேந்திராவின் ஒப்பந்த அரசியல் தான் காரணம். மாநில தலைவர் பதவிக்கு தன்னை எதிர்த்து பசனகவுடா பாட்டீல் எத்னால் போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதால், தனக்கு வேண்டியவர்களை மாவட்ட தலைவர்களாக விஜயேந்திரா நியமிக்க பார்க்கிறார். கட்சிக்கு அவரது பங்களிப்பு என்ன. கட்சியை ஒட்டுமொத்தமாக முடிக்க பார்க்கிறார். அவருக்கு அகங்காரம் தலைக்கு ஏறிவிட்டது.
யுத்தத்திற்கு ரெடி
தயவு செய்து அவரை தலைவர் பதவியில் இருந்து மாற்றும்படி, மேலிட தலைவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். கூடிய விரைவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நட்டாவை சந்திப்பேன். விஜயேந்திரா என்னென்ன செய்கிறார் என்று புகார் அளிப்பேன். இனி பொறுமையாக இருக்க மாட்டேன். யுத்தத்திற்கு தயார்.
கட்சிக்கு உழைப்பவர்களை நசுக்கும் பணியில் விஜயேந்திரா ஈடுபடுகிறார். தனக்கு ஜால்ரா போடுபவர்களுக்கு பதவி கொடுக்கிறார்.
கோர் கமிட்டியில் மாவட்ட தலைவர் நியமனம் குறித்து முடிவு எடுக்கவில்லை என்று பொய் கூறினார். ரவி, பசவராஜ் பொம்மை, ரமேஷ் ஜார்கிஹோளியை அரசியல் ரீதியாக முடித்தது போல் என்னையும் அரசியல் ரீதியாக முடிக்க முயற்சி செய்கிறார்.
எடியூரப்பாவுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். அவரது தலைமைத்துவம் வேறு. எதிரிகளை கூட அரவணைத்து செல்பவர். ஆனால், விஜயேந்திராவிடம் அந்த குணம் இல்லை. எனக்கு பதவி முக்கியம் இல்லை. சுயமரியாதை முக்கியம். காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தேன். எனது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்துவேன்.
அவர்கள் என்ன சொல்கின்றனரோ அதன்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன். விஜயேந்திராவின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த கட்சி தலைவர்கள், தொண்டர்கள் வேதனையில் உள்ளனர். தேசிய தலைவர்கள் தலையிடா விட்டால், கட்சிக்காக உழைத்தவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயேந்திராவுக்கு எதிராக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி ஒரு அணியாக செயல்படும் நிலையில், சமீபத்தில் ஸ்ரீராமுலு கூட விஜயேந்திரா மீது அதிருப்தி தெரிவித்தார். தற்போது அந்த பட்டியலில் சுதாகரும் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.