ADDED : ஆக 22, 2026 05:43 PM
புதுடில்லி: ‘டிவி’ சேனல்களில் ஒரு மணிநேரத்தில் 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்த கால வரம்பை மத்திய அரசு நீக்கியுள்ளது.
கடந்த, 2006ல் விதிக்கப்பட்ட, ‘கேபிள் டிவி நெட்வொர்க்’ விதிகளின் கீழ், ‘டிவி’ சேனல்களின் விளம்பர ஒளிபரப்பு காலம் ஒரு மணி நேரத்தில் 12 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அப்போது, நாட்டில் 62 தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே இருந்தன. தற்போது 900க்கும் மேற்பட்ட சேனல்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போதைய மாற்றம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கூறியிருப்பதாவது:
‘டிவி’ ஒளிபரப்பு துறையில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், விளம்பர ஒளிபரப்பு காலம் தொடர்பான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இந்தியாவில், கட்டண சேனல்கள் மற்றும் இலவச சேனல்கள் என இரு வகை டிவி சேனல்களும் விளம்பர வருவாயை பெரிதும் சார்ந்துள்ளன. ஆனால், விளம்பர ஒளிபரப்பு காலத்துக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத டிஜிட்டல் ஊடகங்களுடன் ஒப்பிடும்போது, பாரம்பரிய தொலைக்காட்சி சேனல்களுக்கு சமமான போட்டி வாய்ப்பு இல்லாத நிலை இருந்தது.
டிவி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கு இடையில் போதுமான போட்டி நிலவுவதை உறுதி செய்ய கேபிள் டிவி நெட்வொர்க் விதிகளில் திருத்தம் செய்துள்ளோம். அதன்படி, டிவி சேனல்களில் ஒரு மணி நேர நிகழ்ச்சியில், 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என்ற கால வரம்பு நீக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
