ADDED : மார் 18, 2024 05:09 AM
தட்சிண கன்னடா : 'கடந்த சட்டசபை தேர்தல் பணிக்கான கார் வாடகை கட்டணம் பலருக்கு இதுவரை வரவில்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்தை கூட தரவில்லை. எனவே, லோக்சபா தேர்தல் பணிக்கு கார்களை வாடகைக்கு விடமாட்டோம்,' என மங்களூரு கார் உரிமையாளர்கள், டிரைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தேர்தலை ஒட்டி, அதிகாரிகள் பயணிப்பதற்காக, தேர்தல் முடியும் வரை வாடகைக்கு கார்கள் அமர்த்தப்படும். 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதற்கான தொகையை, தேர்தல் ஆணையம் வழங்கிவிடும்.
கடந்தாண்டு சட்டசபை தேர்தலுக்காக, கார்கள் பயன்படுத்தப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோருக்கு இன்னும் வாடகை கட்டணம் வரவில்லை. இதனால், இம்முறை கட்டணத்தை தரும் வரையில், தேர்தல் பணிக்கு கார்களை கொடுக்க கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட டாக்சி - மேக்சி சங்க இணை செயலர் சுப்கர ஷெட்டி கூறியதாவது:
சட்டசபை தேர்தல் பணிக்காக எடுக்கப்பட்ட கார்களின் உரிமையாளருக்கு இன்னும் வாடகை கட்டணம் வரவில்லை. எங்களுக்கு இது தான் வாழ்வாதாரம். நிலுவையில் உள்ள கட்டணத்தை வழங்காமல், லோக்சபா தேர்தலுக்கு கார்கள் கேட்பது சரியல்ல. எனவே இம்முறை கார்களை தருவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். கார் எடுக்க வந்தால், அனைவரும் ஒன்று கூடி எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே சில கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, மத்திய தேர்தல் ஆணையத்திடம், கார் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளதாக தெரிகிறது.

