சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு; சிறையில் இருந்து வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்
சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு; சிறையில் இருந்து வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்
UPDATED : செப் 25, 2024 07:09 PM
ADDED : செப் 25, 2024 05:07 PM

புதுடில்லி: யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான, இரண்டாவது குண்டர் சட்டத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
அதேநேரத்தில், அவர் கஞ்சா வைத்து இருந்ததாகவும் அவர் மீது மேலும் சில வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக தேனி போலீசார் கைது செய்தனர்.
இதனை எதிர்த்து அவரது தாயார், உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது, தமிழக அரசு , '' சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை மறுபரிசீலனை செய்த அறிவுரைக் கழகம், அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று கொள்கிறோம் ''என விளக்கம் அளித்தது.
இதனையடுத்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், அவருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால், அவரை உடனடியாக ஜாமினில் விடுதலை செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன் வழக்கை முடித்து வைத்தனர்.