இந்திய வரலாற்றில் முதல் முறை; ஆயுதப்படையில் சிறப்பான பணிக்காக ஜனாதிபதி பதக்கத்திற்கு தாய், மகன் தேர்வு
இந்திய வரலாற்றில் முதல் முறை; ஆயுதப்படையில் சிறப்பான பணிக்காக ஜனாதிபதி பதக்கத்திற்கு தாய், மகன் தேர்வு
UPDATED : ஜன 26, 2025 08:51 PM
ADDED : ஜன 26, 2025 08:35 PM

புதுடில்லி: சிறப்பாக பணியாற்றியதற்காக, ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஆக பணியாற்றும் தாய் மற்றும் விமானப்படையில் கேப்டனாக பணியாற்றும் மகன் ஆகியோர் ஜனாதிபதியிடம் விருது பெற உள்ளனர்.. இப்படி தாய், மகன் விருது பெறுவது வரலாற்றில் இதுவே முதல்முறை.
ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஆக இருப்பவர் சாதனா சக்சேனா நாயர். புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் குடும்ப மருத்துவம், குழந்தைகள் நலன் மற்றும் சுகாதார மேலாண்மைக்காக பட்டம் பெற்ற இவர், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்றுள்ளார். இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்து ராணுவ மருத்துவ சேவையில் பயிற்சி பெற்றுள்ளார். கடந்த 2024 ஆக., 1ல் ராணுவ மருத்துவ சேவைக்கான இயக்குநர் ஜெனரல் ஆக பதவியேற்றார். இதன் மூலம் இந்தப் பதவிக்கு வந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.
இந்திய விமானப்படையின் மேற்கு பிராந்தியத்திலும் முக்கிய பணியாற்றி உள்ளார். தேசிய கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரிரங்கன் குழுவிலும் பணியாற்றி உள்ளார். இவரது சிறந்த சேவையை பாராட்டும் வகையிலும், ஆயுதப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் விஷிஸ்ட் சேவா பதக்கம் அறிவிக்கப்பட்டது.
இவரது மகன், தருண்நாயர். விமானப்படையில், ஸ்குவாட்ரன் லீடராக உள்ளார். இவர் 2018 ஜூன் 16ல் விமானப்படையில் சேர்ந்தார். இவருக்கு வீர தீர செயலுக்கான வாயு சேனா பதக்கம் அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதியிடம் இருந்து இருவரும் இந்த விருதுகளை பெற உள்ளனர். ஒரே ஆண்டில், ஆயுதப்படைகளில் பணியாற்றும் தாய் மற்றும் மகன் சிறந்த சேவைக்காக விருதைப் பெறுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

