குடியரசு தின நிகழ்ச்சிகள்: வாகன போக்குவரத்து மாற்றம்
குடியரசு தின நிகழ்ச்சிகள்: வாகன போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 25, 2024 05:25 AM
பெங்களூரு : குடியரசு தினத்தை முன்னிட்டு, பெங்களூரில் போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பெங்களூரின், மானிக் ஷா பரேட் மைதானத்தில், குடியரசு தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளை காலை 9:00 மணிக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் கொடியேற்றுகிறார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், சுமுகமான போக்குவரத்துக்காகவும் பெங்களூரில் சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:
கார் பாஸ்கள் வைத்துள்ள அழைப்பாளர்கள், பாஸ்களில் நிர்ணயித்துள்ள கேட்களில் இறங்கி, குறிப்பிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, மைதானத்துக்கு உள்ளே செல்ல வேண்டும்.
அவரச சேவை வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை வாகனங்கள், தண்ணீர் டாங்கர், கே.எஸ்.ஆர்.பி. - சி.ஆர்.டி., பெங்களூரு மாநகராட்சி, பொதுப்பணித்துறை வாகனங்கள், இரண்டாவது நுழைவாயில் வழியாக மைதானத்துக்குள் நுழைய வேண்டும். போர்ட் வால் பின்புறம் வாகனங்களை நிறுத்தலாம்.
நிகழ்ச்சிக்கு வரும் ஊடகத்தினரின் வாகனங்கள், மூன்றாவது நுழைவாயில் வழியாக, உள்ளே வந்து மைதானத்தின் கிழக்குப் பகுதியில், நிர்ணயித்த இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
குடியரசு தினத்தன்று காலை 8:00 மணி முதல், 10:30 மணி வரை கப்பன் சாலையின், பி.ஆர்.வி. ஜங்ஷனில் இருந்து, காமராஜர் சாலை ஜங்ஷன் வரை, இரண்டு புறங்களில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மாற்றுவழிகளில் இயக்க வேண்டும்.
இன்பென்ட்ரி சாலையில், மணிப்பால் சென்டரை நோக்கி வரும் வாகனங்கள், நேராக வந்து இன்பென்ட்ரி சாலை - சபீனா பிளாசாவின் இடதுபுறமாக திரும்பி, மைன் கார்டு சாலை, ஆலீஸ் சதுக்கம், டிஸ்பென்சரி சாலை, காமராஜர் சாலை, டிக்கென்சன் சாலை ஜங்ஷனில், வலதுபுறமாக திரும்பி காமராஜர் சாலை ஜங்ஷனில் இடதுபுறமாக திரும்பி, கப்பன் சாலை வழியாக மணிப்பால் சென்டரை நோக்கிச் செல்லலாம்.
மணிப்பால் ஜங்ஷனில் இருந்து, பி.ஆர்.வி. ஜங்ஷனை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு, மணிப்பால் சென்டர் அருகில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள், வெப் ஜங்ஷன் அருகில் வலதுபுறம் திரும்பி, எம்.ஜி. சாலை வழியாக மேயஹால், காவிரி எம்போரியம், அனில் கும்ப்ளே சதுக்கத்தில் இடதுபுறம் திரும்பி முன்னோக்கிச் செல்லலாம்.
அனில் கும்ப்ளே சதுக்கத்தில் இருந்து, கப்பன் சாலையை நோக்கி வரும் வாகனங்கள், நேராக சென்ட்ரல் ஸ்ட்ரீட் சாலையில் சென்று, வலதுபுறம் திரும்பி இன்பென்ட்ரி சாலை.
சபீனா பிளாசாவில் இடதுபுறம் திரும்பி, மைன்கார்டு சாலை, அலி சதுக்கம், டிஸ்பென்சரி சாலை, காமராஜர் சாலை, டிக்கென்சன் சாலையில் வலதுபுறம் திரும்பி, கப்பன் சாலை வழியாக மனிப்பால் சென்டரை நோக்கிச் செல்லலாம்.
சென்ட்ரல் ஸ்ட்ரீட், அனில்கும்ப்ளே சதுக்கத்தில் இருந்து, சிவாஜி நகர் பஸ் நிலையம் வரை, கப்பன் சாலை, சி.டி.பி., சதுக்கத்தில் இருந்து, கே.ஆர்.சாலை, கப்பன் சாலை ஜங்ஷன் வரை, எம்.ஜி.சாலை, அனில் கும்ப்ளே சதுக்கத்தில் இருந்து, குயின்ஸ் சதுக்கம் வரை, வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை மனதில் கொண்டு, பரேட் மைதானத்துக்கு வரும் அழைப்பாளர்கள், மொபைல் போன், கேமரா, ரேடியோ, குடை உட்பட, எந்த பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பொருட்கள் கொண்டு செல்வோர், உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்.
நிகழ்ச்சிக்கு வருவோர், காலை 8:00 மணிக்குள் மைதானத்துக்குள் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.