ADDED : டிச 05, 2024 05:26 PM

புதுடில்லி: இந்திய கடலோர காவல்படை, பாகிஸ்தான் படையினருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை மூலம் மூழ்கிய கப்பலில் இருந்த 12 பணியாளர்களை மீட்டது.
டிசம்பர் 2ம் தேதி, குஜராத்தின் போர்பந்தரிலிருந்து ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்துக்கு சரக்குகளுடன் 'எம்.எஸ்.வி ஏஐ பிரன்பிர்' கப்பல் புறப்பட்டது. கப்பல் வடக்கு அரபிக்கடலில் நேற்று காலை சென்று கொண்டிருந்தபோது, கடல் கொந்தளிப்பு காரணமாக, மூழ்கியது. இந்திய மற்றும் பாகிஸ்தானிய படையினர் உதவியுடன் அதில் இருந்த பணியாளர்கள் மீட்கப்பட்டனர்.
இது குறித்து கடலோர காவல்படை அதிகாரிகள் கூறியதாவது:
அரபிக் கடலில் கப்பல் மூழ்குவதாக தகவல் கிடைத்ததும் காந்திநகரில் உள்ள கடலோர காவல் படை பிரிவுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
கடலோர காவல்படை கப்பல் சார்தக் உடனடியாக அந்த இடத்திற்கு திருப்பி விடப்பட்டது. எம்.ஆர்.சி.சி., பாகிஸ்தானை தொடர்பு கொண்டு அப்பகுதியில் உள்ள அந்த நாட்டின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பினருக்கும் தகவல் தெரிவித்தது.உயிர் பிழைத்தவர்களைத் தேடும் முயற்சியில் எம்.வி காஸ்கோ குளோரி என்ற வணிகக் கப்பலின் பணியாளர்களும் உதவினர்.
இதன் முடிவில் மூழ்கிய கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.இந்த மனிதாபிமான தேடல் மற்றும் மீட்பு பணியானது இந்திய கடலோர காவல்படை மற்றும் பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய ஒத்துழைப்பைக் கண்டது.
மீட்கப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களை மீண்டும் போர்பந்தர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.