ADDED : செப் 24, 2024 07:59 PM
முசாபர்நகர்:உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 28 வயது பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் கோமல்,28. உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் ஜின்ஜானா நகரைச் சேர்ந்தவர் சமீர்,30. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆறு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தனர்.
தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கோமல் கூறியதை சமீர் ஏற்கவில்லை. இந்நிலையில், ஷாம்லி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன் தினம் வந்த கோமல், கூடுதல் கலெக்டர் சந்தோஷ் குமார் சிங்கிடம் மனு கொடுத்தார். அதில், சமீருடன் ஆறு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கிறேன். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த சமீர் இப்போது மறுக்கிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
மனு கொடுத்து விட்டு வந்த கோமல், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அங்கிருந்த போலீசார், கோமலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.