ADDED : அக் 07, 2024 12:27 AM

கோபேஸ்வர்: உத்தரகண்டில் உள்ள மலை சிகரத்தில் ஏறிய வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு மலையேற்ற வீராங்கனையர், 19,735 அடி உயரத்தில் மூன்று நாட்களாக சிக்கி தவித்தனர். அவர்களை, நம் விமானப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
உத்தரகண்டின் சாமோலி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 22,950 அடி உயரத்தில் சவுகாம்பா மலை சிகரம் அமைந்துள்ளது.
இங்கு, அமெரிக்காவைச் சேர்ந்த மிட்செல் தெரசா வோரக் மற்றும் ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பே ஜேன் மேனர்ஸ் ஆகிய இரண்டு மலையேற்ற வீராங்கனையர், நம் நாட்டைச் சேர்ந்த மலையேற்றக் குழுவினருடன் இணைந்து கடந்த 3ம் தேதி ஏறினர்.
கடல் மட்டத்தில் இருந்து 19,735 அடி உயரம் வரை ஏறிய நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு வீராங்கனையரின் உணவு மற்றும் மலையேற தேவையான முக்கிய கருவிகள் அங்குள்ள பள்ளத்தாக்கில் விழுந்தன. இதனால், அவர்கள் இருவரும் அங்கேயே சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இதை அறிந்த மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், இந்திய விமானப் படையினரின் உதவியுடன் அவர்களை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர். மூன்று நாட்களுக்கு பின், அவர்கள் இருவரும் பத்திரமாக நேற்று மீட்கப்பட்டனர்.
அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடும் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக அவர்கள் இருவரையும் மீட்பதில் கடும் சிக்கல் இருந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

