குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 55 பேர்; ஊர் திரும்ப முடியாமல் பரிதவிப்பு
குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 55 பேர்; ஊர் திரும்ப முடியாமல் பரிதவிப்பு
ADDED : செப் 27, 2024 07:44 AM

அகமதாபாத்: குஜராத் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 55 தமிழக சுற்றுலா பயணிகள் லாரியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக சுற்றுலா பயணிகள்
குஜராத் மாநிலத்தில் பலத்த மழை எதிரொலியாக கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில், பாவ் நகர் தாலுகா பகுதியில் 55 தமிழக சுற்றுலா பயணிகள், நிஷ்கலாங்க மகாதேவ் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு பாவ் நகருக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
கடும் வெள்ளம்
கோலியாக் என்ற கிராமத்தை அவர்கள் அடைந்த போது, பயணித்த பஸ் கடும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் பஸ்சிலேயே அனைவரும் மாட்டிக் கொண்டு தவித்தனர். எங்கு நோக்கினும் வெள்ளம் பாய்ந்தோடிக் கொண்டிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் தவித்தனர்.
சவால்
இது குறித்து தகவலறிந்த மாநில பேரிடர் குழுவினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அவர்களை மீட்கும் பணி சவால் நிறைந்ததாக இருந்தது. கடும் போராட்டத்துக்கு பின்னர் அவர்கள் அனைவரும் ஜன்னல்கள் வழியே மீட்கப்பட்டாலும் வெள்ளம் குறையாதது பெரும் சிக்கலாக மாறியது.
தங்க வைப்பு
அங்கிருந்த அவர்களை மீட்டு அழைத்து வரமுடியாமல், தாங்கள் கொண்டு வந்திருந்த லாரியிலேயே மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். வெள்ள நீர் வடிந்தால் மட்டுமே அவர்களை மீட்டு அழைத்து வரமுடியும் என்ற சூழல் காணப்படுகிறது.
பாதுகாப்பு
இது குறித்து பாவ்நகர் பேரிடர் மீட்புக்குழு அதிகாரி சதீஷ் ஜாம்புஜா கூறி உள்ளதாவது: பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களை லாரி மூலம் மீட்புக்குழுவினர் மீட்டு உள்ளனர். ஆனால் அங்கு வெள்ளம் இன்னமும் வடியவில்லை. எனவே அனைவரும் அந்த லாரியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் வடிந்த பின்னர் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

