ADDED : நவ 13, 2024 12:21 AM
மைசூரு ; இந்தியாவில் முதன் முறையாக, யானைகள் குறித்த ஆராய்ச்சி, மைசூரு யானைகள் முகாமில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு விலங்கும், பறவையும் எவ்வாறு ஒலிகள் எழுப்புகின்றன என்பது நமக்கு நன்கு தெரியும். ஆனால், தங்களுக்குள் அவை எப்படி தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன என்பது, புரியாத புதிராகவே உள்ளது.
பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எஸ்.சி., எனும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், கர்நாடக வனத்துறை ஊழியர்களுடன் இணைந்து, யானைகள் எப்படி தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன என்பது குறித்து, ஐந்து ஆண்டு கால ஆராய்ச்சியை துவக்கி உள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக நடக்கும் இந்த ஆராய்ச்சி, மைசூரு யானைகள் முகாமில் நடந்து வருகிறது.
“தங்களுக்குள் யானைகள் ஏன் மோதிக் கொள்கின்றன; மோதலைத் தவிர்ப்பதற்கு வழி என்ன; மனிதர்களின் செயல்பாடுகளை எப்படி புரிந்து கொள்கின்றன; அதிக மற்றும் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகள் குறித்த அடிப்படை ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகிறது,” என, ஆராய்ச்சி குழு உறுப்பினர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

