இனி 8 மணி நேரத்துக்கு முன்னரே 'ரெடி'யாகும் 'ரிசர்வேஷன் சார்ட்'
இனி 8 மணி நேரத்துக்கு முன்னரே 'ரெடி'யாகும் 'ரிசர்வேஷன் சார்ட்'
ADDED : ஜூலை 01, 2025 01:06 AM

புதுடில்லி : ரயில் பயணியர் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலையை அறிந்துகொள்ள வசதியாக, ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்துக்கு முன், 'ரிசர்வேஷன் சார்ட்' எனப்படும் முன்பதிவு அட்டவணை வெளியிட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில் பயணியர் டிக்கெட்டுகளை மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலை, ரயில் புறப்படும் நான்கு மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என, ரயில்வே அமைச்சகத்துக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான பரிந்துரை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அட்டவணை
இந்த பரிந்துரையை ஏற்று, இன்று முதல் அதை படிப்படியாக அமல்படுத்த துவங்கும்படி ரயில்வே வாரியத்துக்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், ரயில் பயணச்சீட்டு முன்பதிவு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. இதனால், பயணியர் தங்கள் பயணங்களை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில், பயணச்சீட்டு முன்பதிவு அட்டவணையை ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்துக்கு முன் வெளியிட ரயில்வே வாரியம் பரிந்துரைத்து உள்ளது.
இதன்படி, மதியம் 2:00 மணிக்கு முன் புறப்படும் ரயில்களுக்கான அட்டவணை, அதற்கு முந்தைய நாள் இரவு 9:00 மணிக்கே வெளியிடப்படும்.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அதை படிப்படியாக அமல்படுத்த துவங்குமாறு ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இது, காத்திருப்பு பயணச்சீட்டுகளை வைத்திருக்கும் பயணியருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இது, தொலைதுாரம் செல்லும் ரயில்களில் பயணிக்க புறநகர் அல்லது கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணச்சீட்டு உறுதி செய்யப்படாவிட்டால், மாற்று ஏற்பாடுகளை செய்ய கூடுதல் நேரத்தை இது வழங்கும்.
நவீன மயம்
அதேபோல், பயணச்சீட்டு முன்பதிவு முறை நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 1 நிமிடத்துக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
இது, தற்போது நடைமுறையில் உள்ள 1 நிமிடத்துக்கு முன்பதிவு செய்யப்படும் 32,000 பயணச்சீட்டுகளுடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.