முஸ்லிம்கள் இடஒதுக்கீடு ; கவர்னருக்கு எத்னால் கடிதம்
முஸ்லிம்கள் இடஒதுக்கீடு ; கவர்னருக்கு எத்னால் கடிதம்
ADDED : மார் 19, 2025 09:18 PM

பெங்களூரு; 'அரசு ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம்' என, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும், கே.டி.பி.பி., எனும் கர்நாடக வெளிப்படை பொது கொள்முதல் (திருத்த) மசோதா - 2025, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இம்மசோதா அரசியல் அமைப்புக்கு எதிரானது. இச்சட்டத்தில், 2 கோடி ரூபாய் வரையிலான சிவில் ஒப்பந்தங்களிலும்; 1 கோடி ரூபாய் வரையிலான பொருட்கள், சேவை ஒப்பந்தங்களிலும் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
கடந்த வாரம் கே.டி.பி.பி., சட்டத்தில் திருத்தம் செய்து, அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது.
ஜாதி, மதத்தின் அடிப்படையில் மக்கள் இடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று பிரிவு 15ன் கீழ், குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் போது, மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அம்பேத்கர் எதிர்த்தார்.
பல மாநிலங்களில் மதம் அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்க, அந்தந்த மாநில நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.
இதையும் மீறி, கர்நாடக காங்கிரஸ் அரசு, ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபட்டுள்ளது.
இடஒதுக்கீட்டு சலுகைகளுக்காக, முஸ்லிம்கள் உட்பட 77 சமூகங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்த, மேற்குவங்க அரசு எடுத்த முடிவை, அம்மாநிலத்தின் கோல்கட்டா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, அம்மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அங்கும் மேற்குவங்க அரசின் மனு தள்ளுபடியானது.
எனவே, இந்த மசோதாவை அங்கீகரிக்க கூடாது. இது அரசியல் அமைப்புக்கு எதிரானது. தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை, இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.