பிரிக்ஸ் நாடுகளின் டிஜிட்டல் நாணயத்தை ஒருங்கிணைக்க ரிசர்வ் வங்கி யோசனை: சர்வதேச வர்த்தகத்துக்கு டாலரை சார்ந்திருப்பது குறையும்
பிரிக்ஸ் நாடுகளின் டிஜிட்டல் நாணயத்தை ஒருங்கிணைக்க ரிசர்வ் வங்கி யோசனை: சர்வதேச வர்த்தகத்துக்கு டாலரை சார்ந்திருப்பது குறையும்
ADDED : ஜன 20, 2026 12:59 AM

புதுடில்லி: பிரிக்ஸ் நாடுகளின் டிஜிட்டல் கரன்சிகளை ஒருங்கிணைப்பதன் வாயிலாக, உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், சுற்றுலா தொடர்பான பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ளலாம் என, ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளும், 6 இதர நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கை காரணமாக பிரிக்ஸ் நாடுகளும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் மத்திய வங்கிகள், தங்களது டிஜிட்டல் நாணயங்களுக்குள் ஒருங்கிணைப்பைக் கொண்டு வர வேண்டும் என, ரிசர்வ் வங்கி ஆலோசனை தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, சர்வதேச வர்த்தகத்துக்கு, அமெரிக்க டாலரை சார்ந்திருக்கும் நிலை, வெகுவாகக் குறையும்.
இந்தாண்டு இந்தியா தலைமை ஏற்று நடத்த இருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிரிக்ஸ் கூட்டமைப்பை அமெரிக்காவுக்கு எதிரான அமைப்பு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்த நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆலோசனை முக்கியத்துவம் பெற்று உள்ளது.
கடந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில், உறுப்பு நாடுகளிடையே பரிவர்த்தனை அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

