உணவக உரிமையாளர் விபரங்கள் பா.ஜ., வழியை பின்பற்றும் காங்.,
உணவக உரிமையாளர் விபரங்கள் பா.ஜ., வழியை பின்பற்றும் காங்.,
ADDED : செப் 26, 2024 03:01 AM
சிம்லா, உத்தர பிரதேச அரசைத் தொடர்ந்து, ஹிமாச்சலில் உள்ள உணவகங்களில் உரிமையாளர் விபரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு பொதுப்பணித்துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகளுடன், அமைச்சரும், மாநில காங்., தலைவருமான விக்ரமாதித்ய சிங் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், சுகாதாரமான முறையில் உணவுகள் விற்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், ஹிமாச்சலில் உள்ள அனைத்து உணவகங்களிலும் அக்கடையின் உரிமையாளர் உட்பட அதன் பொறுப்பாளர்கள், மேலாளர்கள் ஆகியோரின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதை மாநில அரசு உத்தரவாகவும் பிறப்பித்தது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அமைச்சர் விக்ரமாதித்ய சிங் கூறுகையில், 'உணவகங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, சாலையோர உணவகங்களுக்கும் பொருந்தும்' என, குறிப்பிட்டார்.
இதேபோன்ற உத்தரவை, உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு நேற்று முன்தினம் அங்குள்ள உணவகங்களுக்கு பிறப்பித்தது. அண்டை மாநிலமான ஹிமாச்சலில் காங்., அரசும் அந்த நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.