சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதிலடி: காஷ்மீர் துணை நிலை கவர்னர் உறுதி!
சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதிலடி: காஷ்மீர் துணை நிலை கவர்னர் உறுதி!
ADDED : அக் 26, 2024 09:56 PM

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் தகுந்த பதிலடி தருவோம் என துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கூறினார்.
எல்லைப் பாதுகாப்புப் படை விழாவில் மனோஜ் சின்ஹா மேலும் பேசியதாவது:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் தனது நாசகர செயலை தொடர்கிறது.
வறுமை மற்றும் பசியால் குடிமக்களை துன்புறுத்துவது மட்டுமில்லாமல், பயங்கரவாதத்தை ஆதரிப்பது, போதைப்பொருள் கடத்தல் போன்ற செயல்களை தொடர்ந்து செய்கிறது.
கந்தர்பால் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் உள்ள எங்கள் துணிச்சலான வீரர்கள், பொதுமக்கள், உள்கட்டமைப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து வந்த சில தொழிலாளர்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
காஷ்மீரில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நமது பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுப்பர்.
பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி, குடிமக்கள் தங்கள் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நனவாக்கும் சூழலை உருவாக்குவதே பாதுகாப்புப் படைகளின் நோக்கம்.
பயங்கரவாதத்திற்கு உதவுபவர்களுக்கு எதிராக முன்மாதிரியான நடவடிக்கை எடுப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கிறோம்.
இவ்வாறு மனோஜ் சின்ஹா பேசினார்.