8 மணி நேரத்தில் ரூ.10 கோடி இழந்த ஓய்வுபெற்ற பொறியாளர்
8 மணி நேரத்தில் ரூ.10 கோடி இழந்த ஓய்வுபெற்ற பொறியாளர்
ADDED : நவ 15, 2024 11:56 PM

புதுடில்லி: 'ஆன்லைன்' வாயிலாக பணம் பறிக்கும் கும்பல், 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில், மோசடி செய்து, கோடிக்கணக்கில் பணம் சுருட்டி வருவது அதிகரித்துள்ளது.
இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். டிஜிட்டல் முறையில் கைது செய்யும் விதி உலகளவில் எங்குமே நடைமுறையில் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், டில்லி ரோகிணி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளரிடம், டிஜிட்டல் கைது என்ற பெயரில், 10 கோடி ரூபாயை மர்ம நபர்கள் சமீபத்தில் ஏமாற்றியுள்ளனர்.
இது குறித்து போலீசில் அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
நானும், என் மனைவியும் டில்லி ரோகிணி செக்டார் 10ல் வசித்து வருகிறோம். என் மகன் துபாயிலும், மகள் சிங்கப்பூரிலும் வசிக்கின்றனர்.
சமீபத்தில் என்னை தொடர்பு கொண்ட நபர், தைவானில் இருந்து என் பெயருக்கு வந்த பார்சல் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், அந்த பார்சலில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக மும்பை போலீசின் குற்றப்பிரிவு அதிகாரிகள் என்னிடம் பேசுவர் என்றும், அதற்காக 'ஸ்கைப்' எனப்படும் வீடியோ கால் செயலியை டவுன்லோடு செய்யும்படியும் அந்நபர் கூறினார்.
ஸ்கைப் வீடியோ காலில் தோன்றிய நபர் டிஜிட்டல் முறையில் என்னை கைது செய்திருப்பதாக கூறி, 8 மணி நேரம் ஒரே இடத்தில் இருக்கச் செய்தார்.
பின், என் வங்கிக் கணக்கில் இருந்த 10.30 கோடி ரூபாயை, விசாரணை முடியும் வரை அரசு வசம் செலுத்தும்படி கூறி, வெவ்வேறு வங்கி கணக்குகளை தந்தார்.
நான் பணத்தை மாற்றியதும், தொடர்பை துண்டித்துக் கொண்டார். இது குறித்து என் பிள்ளைகளிடம் தெரிவித்த போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
டில்லி போலீசின் சைபர் குற்றப்பிரிவு தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து ஸ்கைப்பில் பேசியுள்ளதையும், அவருக்கு உள்ளூர் நபர் தகவல்கள் தந்து உதவியதையும் கண்டறிந்துள்ளனர்.
இதுவரை, மோசடியாளரின் வங்கிக் கணக்கில் இருந்த 60 லட்சம் ரூபாயை முடக்கியுள்ளனர். மீதமுள்ள பணத்தை மீட்கவும் முயற்சித்து வருகின்றனர்.