'இண்டி' கூட்டணி வேட்பாளரை நக்சல் ஆதரவாளர் என்பதா? அமித் ஷாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்
'இண்டி' கூட்டணி வேட்பாளரை நக்சல் ஆதரவாளர் என்பதா? அமித் ஷாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்
ADDED : ஆக 26, 2025 12:02 AM
புதுடில்லி: 'இண்டி' கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளரான ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி, நக்சல் ஆதரவாளர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்ததற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கேரளாவின் கொச்சி நகருக்கு சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
'சால்வா ஜுடும்'
அப்போது 'இண்டி' கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை கடுமையாக விமர்சித்தார்.
கடந்த 2011ல், 'சால்வா ஜுடும்' வழக்கில், நக்சல்களுக்கு ஆதரவாக அவர் தீர்ப்பளித்தார் என்றும், அப்படியொரு தீர்ப்பு வராமல் இருந்திருந்தால் 2020க்குள் நக்சல்கள் ஒழிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் கூறியிருந்தார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு, முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி உடனடியாக மறுப்பு தெரிவித்தார். அந்த தீர்ப்பு தான் வழங்கியது அல்ல; உச்ச நீதிமன்றம் வழங்கியது என பதிலளித்தார்.
மேலும், தீர்ப்பின் விபரத்தை முழுமையாக படித்திருந்தால், அமித் ஷா இப்படி விமர்சித்திருக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.
கையெழுத்து
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு, அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் குரியன் ஜோசப், மதன் பி. லோகுர், சலமேஸ்வர், ஏ.கே.பட்நாயக், அபய், கோபால கவுடா, விக்ரம்ஜித் சென் ஆகியோர் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கைக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் கோவிந்த் மாத்துார், முரளிதர், சஞ்சீவ் பானர்ஜி மற்றும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அஞ்னா பிரகாஷ், பிரவீண் குமார், கோபல் ரெட்டி, ரகுராம், கண்ணன், சந்துரு, சந்திரகுமார், கைலாஷ் கம்பீர் உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
அதில், கூறப்பட்டிருப்பதாவது:
உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை பாரபட்சமான முறையில் தவறாக சித்தரிப்பது அரசியலில் உயர்ந்த பதவி வகிப்போருக்கு அழகல்ல. இது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அதிர்ச்சி அடைய வைத்ததுடன், நீதித்துறையின் சுதந்திரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பு
சத்தீஸ்கரில் நக்சல்களை ஒடுக்க, பழங்குடியின இளைஞர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக அம்மாநில அரசு நியமித்தது. இந்த படைக்கு 'சால்வா ஜுடும்' என பெயர் வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதி எஸ்.எஸ்.நிஜ்ஜாருடன் இணைந்து, நீதிபதி சுதர்ஷன் ரெட்டியும் விசாரித்தார்.
நக்சல்களுக்கு எதிரான போரில் இளைஞர்களை ஈடுபடுத்துவது சட்டவிரோதமானது மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என 2011ல் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

