கமிஷன் வாங்கியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு! கான்ட்ராக்டர்கள் சங்க மாநாட்டில் சித்தராமையா சவால்
கமிஷன் வாங்கியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு! கான்ட்ராக்டர்கள் சங்க மாநாட்டில் சித்தராமையா சவால்
ADDED : மார் 05, 2024 07:01 AM

பெங்களூரு; “முதல்வராக இருக்கும் நான் யாரிடம் இருந்தும், 5 பைசா கூட கமிஷன் வாங்கவில்லை. நான் கமிஷன் வாங்கியதாக கூறுபவர்கள் அதை நிரூபித்தால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்,” என, கான்ட்ராக்டர்கள் சங்க மாநாட்டில், முதல்வர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமையா முதல்வராக உள்ளார். கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அனைத்து துறைகளின் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தங்களுக்கு தெரியாமல் இடமாற்றம் நடப்பதாக, அரசு மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் குற்றஞ்சாட்டினர்.
முதல்வரின் அலுவலக அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, அதிகாரிகள் இடமாற்றத்தில் கோடிக்கணக்கில் பணம் வசூலிப்பதாக பா.ஜ.,வும் தன் பங்கிற்கு குற்றம் சாட்டியது. ஆனால் இவற்றை சித்தராமையா மறுத்தார்.
இந்நிலையில், முந்தைய பா.ஜ., அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு கூறிய, கர்நாடக கான்ட்ராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, காங்கிரஸ் அரசு மீதும் 40 சதவீத கமிஷன் புகார் கூறினார். பின்னர் திடீரென அரசு மீது பாராட்டு மடல் வாசித்து, 'யு - டர்ன்' அடித்தார்.
ஐந்து பைசா
இந்நிலையில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கர்நாடகா கான்ட்ராக்டர்கள் சங்க மாநாடு நேற்று நடந்தது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, ஜமீர் அகமதுகான், போசராஜு, கான்ட்ராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா மற்றும் கான்ட்ராக்டர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சித்தராமையா பேசியதாவது:
கடந்த 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தேன். தற்போது 2023 முதல் முதல்வராக இருக்கிறேன். இதுவரை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 5 பைசா கூட, கமிஷன் வாங்கியதில்லை.
நான் கமிஷன் வாங்குவதாக குற்றம் சாட்டுபவர்கள் அதை நிரூபித்தால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். முந்தைய பா.ஜ., அரசு போன்று கான்ட்ராக்டர்களிடம் இருந்து, நாங்கள் 40 சதவீத கமிஷன் பெறவில்லை.
நிலுவையில் உள்ள கான்ட்ராக்டர்களின், 'பில்' பாக்கி கொடுக்க, அரசு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கும் என்று உறுதி அளிக்கிறேன். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும், 'பத்ரா மேலணை திட்டத்திற்கு 5,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' என்றனர். இன்று வரை ஒரு ரூபாய் கூட வரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பாலும், தேனும்
துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
அடுத்த ஒன்பது ஆண்டுகள், கர்நாடகாவில் நாங்கள் தான் ஆட்சியில் இருப்போம். கான்ட்ராக்டர்கள் பிரச்னையை தீர்த்து வைப்போம். கான்ட்ராக்டர்கள் இல்லாமல் அரசு இயங்க முடியாது. நாங்கள் அரசாங்கத்தை நடத்துகிறோம். நீங்கள் மக்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுக்கிறீர்கள்.
சரியான திட்டமிடல் இன்றி, முந்தைய பா.ஜ., அரசு உங்கள் மீது பாரத்தை ஏற்றியது. 'பேக்கேஜ்' முறையை ரத்து செய்ய வேண்டும். பாக்கி பில் தொகை விடுவிக்க வேண்டும் என்பது உட்பட, உங்களது பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
நீங்கள் கடன் வாங்கி, சொத்துகளை அடமானம் வைத்து பணி செய்து உள்ளீர்கள் என்பதை அறிவேன். லோக்சபா தேர்தல் முடிந்ததும், உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அரசு, கான்ட்ராக்டர்கள் இடையிலான உறவு பாலும், தேனும் போன்றது. ஒன்றாக அமர்ந்து பேசி, உங்கள் பிரச்னைக்கு தீர்வு காண்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில், கான்ட்ராக்டர்கள் கோரிக்கை தொடர்பான மனுவை, முதல்வர் சித்தராமையாவிடம், கெம்பண்ணா அளித்தார்.

