ADDED : மார் 08, 2024 02:17 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் அறிவித்தவுடன், போஸ்டர்கள், பேனர்களை அகற்ற வேண்டும் என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதி உள்ளார்.
லோக்சபா தேர்தல் இம்மாதத்துக்குள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மாநிலம் முழுதும் தேர்தல் ஜுரம் அதிகரித்துள்ளது.
இப்போதே தங்கள் தலைவருக்கு 'சீட்' வழங்க வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தொண்டர்களும் போஸ்டர், பிளக்ஸ் பேனர்கள் ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதி உள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில், அரசு, பொது மற்றும் தனியார் இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத போஸ்டர்கள், சுவரொட்டிகள், பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும். இது தொடர்பாக, தகவல்களை சேகரிக்க முன்கூட்டியே குழுக்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

