உள்ளாட்சி அமைப்புக்கு உட்பட்ட நிலத்தில் மக்களுக்கு பட்டா வழங்க கேரள அரசு முடிவு வருவாய் துறை அமைச்சர் ராஜன் பேச்சு
உள்ளாட்சி அமைப்புக்கு உட்பட்ட நிலத்தில் மக்களுக்கு பட்டா வழங்க கேரள அரசு முடிவு வருவாய் துறை அமைச்சர் ராஜன் பேச்சு
ADDED : செப் 19, 2024 09:41 PM

பாலக்காடு: 'உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட நிலத்தை, தகுதியுள்ள மக்களுக்கு பட்டா வழங்கும் வகையில் அரசு விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது,' என, கேரள வருவாய் துறை அமைச்சர் ராஜன் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு எம்.இ.எஸ்., கல்லூரி வளாகத்தில், மண்ணார்க்காடு-, அட்டப்பாடி தாலுகாவில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோங்காடு எம்.எல்.ஏ., சாந்தகுமாரி தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் சித்ரா கலந்து கொண்டனர்.
பட்டா வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கேரள வருவாய் துறை அமைச்சர் ராஜன் பேசியதாவது:
உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட நிலத்தை, தகுதியான மக்களுக்கு பட்டா வழங்கும் வகையில் அரசு விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. அரசு, ஊராட்சிக்கு வழங்கிய நிலம், ஊராட்சி வாயிலாக வாங்கிய நிலம், பல்வேறு வீட்டு வசதி திட்டங்களுக்காக ஊராட்சிகளால் கையகப்படுத்தப்பட்ட நிலம் போன்றவை, கிராமத்தில் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும்.
இதற்காக, கிராமத்தில் துவங்கி, மாவட்ட கலெக்டர், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் வாயிலாக மறு ஆய்வு செய்து, பட்டா வழங்கும் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.
பல்வேறு துறைகளின் கீழ் உள்ள நிலத்தை அரசு அனுமதியுடன் பட்டா வழங்கலாம் என்ற வகையில் ஆலோசனையும் நடந்து வருகிறது. நிலம் இல்லாத மக்களுக்கு விரைவில் நிலம் வழங்குவதே அரசின் நோக்கமாகும்.
பாலக்காடு மாவட்டத்தில், மக்களுக்கு அதிகளவில் பட்டா வழங்கப்பட்டுள் ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், மாவட்டத்தில், 41,879 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, பேசினார்.