ADDED : மார் 13, 2024 10:02 PM
பலியா:போலி சொத்து ஆவணங்கள் தயாரித்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் பலியா நகரில் வசிப்பவர் பரசுராம் உபாத்யாய்.
இங்குள்ள கோட்வாலி போலீசில், பரசுராம் கொடுத்த புகாரில், ''சர்ச்சைக்குரிய சொத்து உரிமையை மாற்ற, என் தரப்பைக் கேட்காமல், தாசில்தார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
''மேலும், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் என் குடும்ப சொத்துக்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து, வருவாய்த் துறை பதிவேடுகளிலும் திருத்தம் செய்துள்ளனர்,'' என, கூறியுள்ளார்.
விசாரணை நடத்திய பலியா மாவட்ட கூடுதல் எஸ்.பி., துர்கா பிரசாத் திவாரி பிறப்பித்த உத்தரவின் படி, கோட்வாலி போலீசார், முன்னாள் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆறு பேரும் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீசார் கூறினர்.
