பீஹாரில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டோருக்கு வாய்ப்பு; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
பீஹாரில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டோருக்கு வாய்ப்பு; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
UPDATED : ஜூலை 28, 2025 07:45 AM
ADDED : ஜூலை 28, 2025 04:43 AM

பீஹாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடர்ந்து, ஆக., 1ல் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. இதில் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்க்கவும் வாய்ப்பு வழங்கப்படும் என, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் - நவம்பரில் தேர்தல் நடக்கிறது.
தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில், ஆளும் பா.ஜ., கூட்டணி செயல்பட்டு வருகிறது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.
சரிபார்ப்பு தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள, கடந்த ஜூன் இறுதியில் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இதன்படி, பீஹார் முழுதும் வீடு வீடாகச் சென்று தேர்தல் கமிஷன் ஊழியர்கள், வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்து வருகின்றனர்.
இதற்கு காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பணியால் தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான வாக்காளர்களின் ஓட்டுரிமை பறிக்கப்படும் என, எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தன.
இதை திட்டவட்டமாக மறுத்த தேர்தல் கமிஷன், ஒவ்வொரு வாக்காளரின் ஓட்டுரிமையை உறுதி செய்யவும், பிழையின்றி வாக்காளர் பட்டியலை உருவாக்கவும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அவசியம் என ஆணித்தரமாகக் குறிப்பிட்டது.
இதை ஏற்காத எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், ஆதார், ரேஷன் கார்டுகளையும் தகுதியுள்ள ஆவணங்களாக பரிசீலிக்கும்படி தேர்தல் கமிஷனை கேட்டுக் கொண்டது.
பதிலளித்த தேர்தல் கமிஷன், புழக்கத்தில் நிறைய போலியான ஆதார், ரேஷன் கார்டுகள் இருப்பதால், அவற்றை நம்பகமான ஆவணங்களாகக் கருத முடியாது என தெரிவித்தது.
இதற்கிடையே இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தொடரும் இந்நிலையில், பீஹாரில் நடக்கும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியல், ஆக., 1ல் வெளியிடப்படும். இதில், 65 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற மாட்டர். 22 லட்சம் இறந்த வாக்காளர்கள்; நிரந்தரமாக இடம் பெயர்ந்த அல்லது மாயமான 36 லட்சம் வாக்காளர்கள்; ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ள 7 லட்சம் பேர் இதில் அடங்குவர்.
ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்ததில், 36 லட்சம் வாக்காளர்கள், அவர்களது முகவரியில் இல்லை.
இவர்கள் மற்ற மாநிலங்களில் நிரந்தரமாக குடிபெயர்ந்திருக்கலாம் அல்லது ஏதேனும் காரணத்திற்காக, இந்த சிறப்பு திருத்த நடவடிக்கையின்போது, வாக்காளராக பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்த வாக்காளர்களின் பெயர்கள் மட்டும், மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அது அப்படியே தொடரும்.
சமூக ஊடகங்களில் வாக்காளர் தெரிவிக்கும் புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதி வாய்ந்த வாக்காளர்கள், உரிய ஆவணங்களுடன், தேர்தல் பதிவு அதிகாரி அல்லது உதவி தேர்தல் பதவி அதிகாரியிடம் ஆக., 1 - செப்., 1 வரை விண்ணப்பிக்கலாம்.
இதில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பதிவு அதிகாரியின் உத்தரவு இல்லாமல், எந்த வாக்காளரின் பெயரும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

