ADDED : செப் 21, 2024 06:53 AM

அசைவ உணவு பிரியவர்களுக்கு வாரத்தில் ஏழு நாட்களும் அசைவம் சாப்பிட்டாலும் அதன் மீதான அலுத்துப் போகாது.
ஆனாலும் இது புரட்டாசி மாதம் என்பதால், இந்த மாதம் முழுதும் சைவம் மட்டுமே. வீடுகளில் இறைச்சி எடுக்க மாட்டார்கள். இதனால் அசைவம் சாப்பிட முடியாமல் போகுமோ என்ற கவலை இனி வேண்டாம். வாழைப்பூவிலே அயிரை மீன் குழம்பு செய்து அசத்தலாம். அது பற்றி பார்க்கலாம்.
ஒரு வாழைப்பூ வாங்கிக் கொள்ளுங்கள். வாழைப்பூவின் தோல்களை நன்கு உரித்து சுத்தம் செய்யவும். அடுப்பில் சட்டியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
அரை டீஸ்பூன் வெந்தயம், அரை டீஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை கொஞ்சம், சின்ன வெங்காயம் போதுமான அளவு, வெட்டி வைத்த இரண்டு தக்காளி, ஒரு முழு பூண்டு, தேவையான அளவு பச்சை மிளகாய் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கிய பின், தேவைக்கு ஏற்ப புளி கரைசலை அதனுடன் ஊற்ற வேண்டும். தேவையான அளவு உப்பு, மிளகாய் துாள், மஞ்சள் துாள், பெருங்காய பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் முதலில் உரித்து வைத்த வாழைப்பூவை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். தேங்காய், தேவைக்கேற்ப சின்ன வெங்காயம், சீரகம் என மூன்றையும் மிக்ஸியில் அரைத்து, குழம்பு கொதித்தபின் சேர்க்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் கொதித்த பின், மல்லி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும். சூடான, சுவையான, செமையான சைவ மீன் குழம்பு ரெடி - நமது நிருபர் -.