வங்கதேசத்தில் கோவில் எரிப்பு சிலைகளையும் உடைத்தது கலவர கும்பல்
வங்கதேசத்தில் கோவில் எரிப்பு சிலைகளையும் உடைத்தது கலவர கும்பல்
ADDED : டிச 07, 2024 11:27 PM

டாக்கா: வங்கதேசத்தில் உள்ள ஹிந்து கோவில் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், அங்கிருந்த கடவுள்களின் சிலைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக, 'இஸ்கான்' அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 'இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி அமைப்பின் கிளை செயல்பட்டு வருகிறது. இதன் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி, 'சம்மிலிதா சனாதனி ஜக்ரன் ஜோதே' என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
போராட்டம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி, ரங்பூர் பகுதியில் அவர் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, வங்கதேச கொடியை கிருஷ்ண தாஸ் அவமதித்ததாக, அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த முயன்றபோது, ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதையடுத்து, அங்கு கடந்த சில நாட்களாக ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள டாக்கா மாவட்டத்தின் துார் கிராமத்தில் அமைந்துள்ள ஹிந்து கோவில், மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாக, கோல்கட்டாவில் செயல்படும் இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாராமன் தாஸ் புகார் தெரிவித்துஉள்ளார்.
மர்ம நபர்கள்
இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்கின்றன.
'துராக் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட துார் கிராமத்தில் அமைந்துள்ள, ஹரே கிருஷ்ணா நம்ஹட்டா மையத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோவில் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ மஹாபாக்ய லஷ்மி நாராயண் கோவிலுக்கு, மர்ம நபர்கள் நேற்று தீ வைத்தனர்.
அதிகாலை 3:00 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. கோவிலின் பின்புறத்தில் உள்ள தகரக் கூரையை துாக்கிவிட்டு, கோவிலில் பெட்ரோலை ஊற்றி அவர்கள் தீ வைத்துள்ளனர். கோவிலில் இருந்த சிலைகள் தீயில் எரிந்து கருகின' என தெரிவித்துள்ளார்.